வெளிநாட்டு ஊழியர்களின் மனவுளைச்சலைக் குறைக்க இளையர்களின் முயற்சி

வெளிநாட்டு ஊழியர்களின் மனவுளைச்சலைக் குறைக்க இளையர்களின் முயற்சி

2 mins read
20d13b35-d58c-4068-bb44-1a0df18d6647
நிகழ்ச்சியில் கேளிக்கை விளையாட்டுகளில் பங்கெடுத்த ஊழியர்கள். - படம்: ஆயிஷா ரோஸ்

சிண்டா வெளிநாட்டு ஊழியர்களுக்காகச் சமூக விளையாட்டு நிகழ்ச்சியொன்றை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ‘ஐடிஇஎல்பி 2026’ எனும் தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) தலைமைத்துவத் திட்டத்தின் ஒரு பகுதியாக மே 16ஆம் தேதி துவாஸில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் அது நடைபெற்றது.

‘சேவை மனப்பான்மையுடன் கூடிய தலைமைத்துவம்’ என்பது நிகழ்ச்சியின் கருப்பொருள்.

நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டு வேலைச் சுமையை மறந்து உற்சாகமாகக் கொண்டாடினர். நிகழ்ச்சியில் முடி திருத்தும் சேவைகள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. எலுமிச்சம்பழம் உள்ள கரண்டியைப் பல்லால் கடித்துக்கொண்டு நடப்பது, மேசையில் உள்ள கூம்புகளைக் குறிவைத்து வளையம் வீசுவது போன்ற பல்வேறு கேளிக்கை விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சியின் நிறைவாக நடத்தப்பட்ட அதிர்ஷ்டக் குலுக்கில், வெளிநாட்டு ஊழியர் ஒருவர் புத்தம் புதிய ‘ஐஃபோன் 17’ஐப் பரிசாக வென்றார்.

“ஒவ்வொரு நாளும் வேலையை முடித்துவிட்டு வந்து, குடும்பத்தினருடன் பேசிவிட்டு உறங்குவதுதான் இங்கு எனது வழக்கமான நடைமுறையாக இருந்தது. ஆனால், இன்று வேலையை முடித்துவிட்டு இங்கு இளையர்களுடன் இணைந்து, மிகவும் மகிழ்ச்சியாக விளையாடினோம். இப்போது மனவுளைச்சல் இல்லாமல் நிம்மதியாக உணர்கிறேன்,” என்றார் நிகழ்வில் கலந்துகொண்ட வெளிநாட்டு ஊழியர் பிரிதிவிராஜ், 29.

முடி திருத்தும் சேவையைப் பெறும் வெளிநாட்டு ஊழியர்கள்.
முடி திருத்தும் சேவையைப் பெறும் வெளிநாட்டு ஊழியர்கள். - படம் : ஆயிஷா ரோஸ்

தலைமைத்துவத் திட்டத்தில் இணைந்த பிறகே ஒரு தலைவராக உருவாக முடியும் என்ற நம்பிக்கையும் சமூகத்தில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என்ற புரிதலும் ஏற்பட்டதாகக் கூறினார் ஐடிஇ மாணவி மதுமிதா.

“நமது நேரத்தைச் செலவழித்து இங்கு வரும்போதுதான் பிற பள்ளி மாணவர்களுடன் பழகவும் அவர்களின் தனித்துவமான சிந்தனைகளையும் கருத்துகளையும் அறிந்துகொள்ளவும் சிறந்த வாய்ப்புக் கிடைக்கிறது. இது நிச்சயம் இளையர்களுக்குச் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை,”என்று அவர் குறிப்பிட்டார்.

ஐடிஇ தலைமைத்துவத் திட்டத்தில் பங்கெடுத்தவர்கள்.
ஐடிஇ தலைமைத்துவத் திட்டத்தில் பங்கெடுத்தவர்கள். - படம் : ஆயிஷா ரோஸ்
குறிப்புச் சொற்கள்