சிங்கப்பூர்ச் சமூக, மானுடவியல் பல்கலைக்கழகத்தின் முதல் ஆண்டு கணக்கியல் துறை (Accountancy) மாணவரான நிஷாந்த் துரை மாணிக்கம், 21, ஓய்வு நேரத்தில் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் முயற்சிகளுக்குப் பங்களிக்கிறார்.
தேசிய சேவையின்போது (National Service) தேசிய இளையர் மன்றத்தின் (National Youth Council) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிஷாந்த், சமூக நடப்புகளையும் பிரச்சினைகளையும் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகளைப் பெற்றார். அந்த அனுபவம், மேலும் பல்வேறு திட்டங்களில் சேர்வதற்கு அவருக்கு உந்துதல் தந்தது.
‘அமைதிக்கான வெற்றியாளர்கள்’ (Champions for Peace) என்ற பயிலரங்கில் பங்கேற்ற 50 இளையர்களில் அவரும் ஒருவர். ‘ஹேஷ்.பீஸ்’ (Hash.peace) அமைப்பு ஏற்பாடு செய்த இப்பயிலரங்கில் ஆசியான் வட்டார இளையர்கள் இணைந்து ஒற்றுமைக்கான தங்களது யோசனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்தனர்.
கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்கான வாய்ப்பைப் பெற்ற நிஷாந்திற்கு, மேலும் பல மாநாடுகளில் கலந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.
“ஒற்றுமையும் அமைதியும் சிங்கப்பூரின் பெரும் பலம். இந்த வட்டாரத்தின் சில நாடுகளில் பதற்றமும் வன்முறையும் நிலவுவதைக் காணும்போது நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பதை உணர முடிகிறது,” என்றார் அவர்.
ஆக்ககரமான நிகழ்ச்சிகளுடனும் நல்ல தலைவர்களுடனும் ஊடாட வாய்ப்பு பெறும் இளையர்கள், அறப்பணிகளுக்கு ஈர்க்கப்படுவர் என்பதற்கு நிஷாந்த் ஓர் எடுத்துக்காட்டு.
‘ஹேஷ்.பீஸ்’ முன்னதாக நடத்திய ‘அன்கான்ஃப்ரன்ஸ்’ (Unconference) என்ற மாநாட்டிலும் அவர் சேர்ந்தார். சமூக நலன் சார்ந்த அந்த மாநாட்டின் நீக்குப்போக்கான அணுகுமுறை நிஷாந்திற்குப் பிடித்திருந்தது.
‘ஹேஷ்.பீஸ்’ நிறுவனர் நஸ்ஹத் ஃபஹிமாவுடன் உரையாடி அந்த அமைப்பின் நோக்கங்களை மேலும் புரிந்துகொண்டதை அடுத்து, அதில் சேர்ந்ததாக நிஷாந்த் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து பல தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுபட நிஷாந்த் விரும்புகிறார்.
“தேசிய இளையர் மன்றத்துடன் கேபிஎம்ஜி (KPMG) தணிக்கை நிறுவனம், சமூக நீடித்த நிலைத்தன்மை (social sustainability) திட்டத்தை இணைந்து நடத்துகிறது. உடற்குறையுள்ளோர் உள்ளிட்டவர்களை வேலைவாய்ப்புகளுடன் இணைக்கும் தொண்டில் என்னைப் போன்ற கிட்டத்தட்ட 40 இளையர்களை இந்தத் திட்டம் ஈடுபடுத்துகிறது,” என்றார் அவர்.
ஈசூன் தொடக்கக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் கற்ற அனுபவம், தம் மனத்தைப் பண்படுத்தித் தொண்டூழியத்திற்கு இட்டுச் சென்றதாகவும் நிஷாந்த் குறிப்பிடுகிறார். “இதற்காக என் தமிழ் ஆசிரியர் அ. மல்லிகாவுக்கு நன்றி கூற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
நல்ல மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக, சமூக விவகாரங்களை அறிந்துகொள்வதன் முக்கியத்துவம் குறித்து அந்தப் பயிலரங்கின்வழி கற்றதாக நிஷாந்த் குறிப்பிட்டார்.
“எண்ணங்களைச் செயல்படுத்தப் பங்காளிகளாக இருக்கக்கூடியவர்களை நாடி, அவர்களை நம் தொடர்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்வது அவசியம். யோசனைகளும் எண்ணங்களும் பல இருந்தாலும், அவற்றைச் சரியான வார்த்தைகளாகவும் செயல்களாகவும் வடிப்பதற்குத் திறன் தேவை,” என்றார் இந்த இளையர்.

