விஷ்ருதா நந்தகுமார்: தன்னம்பிக்கை தந்த தமிழ் முரசு அனுபவம்
“ஏறத்தாழ ஓராண்டிற்கு முன்பு, இதழியல் துறையைப் பற்றி எந்தவோர் அறிமுகமுமின்றி நான் தமிழ் முரசு அலுவலகத்திற்குள் கால் பதித்தேன். தமிழ் மொழியின்மீது எனக்கு இருந்த ஆர்வமே, நான் இச்செய்தி அறைக்குவர காரணம்.
“2025 பொதுத்தேர்தலின்போது நடந்த சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு எனக்குக் கொடுக்கப்பட்ட முதல் பணி.
“அப்போது, அக்கட்சியின் முழு பெயர் என்னவென்று என் மேற்பார்வையாளர் கேட்ட கேள்விக்கு நான் திகைத்து நின்றது இன்றும் என் நினைவிலேயே இருக்கிறது.
“என் முன் காத்திருந்த நீண்ட பயணம் என் வாழ்க்கையையே இவ்வளவு தூரம் மாற்றியமைக்கும் என்று அத்தருணத்தில் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்று, ‘எஸ்பிஎச் மீடியா’ செய்தித்துறை உபகாரச் சம்பளம் பெற்ற தமிழ் முரசின் கல்விமானாகச் செய்தி அறையின் பல்வேறு பணிகளில் பங்களிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.
“ஓர் ஆண்டிற்கு முன்புவரை செய்தித்தாளைப் புரட்டிக்கூடப் பார்க்காத நான், இப்போது அன்றாடம் செய்திகளை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். தமிழ் முரசின் 90ஆம் ஆண்டு நிறைவு விழா, பொதுத்தேர்தல் 2025, தேசிய தின அணிவகுப்பு 2025, வரவுசெலவுத் திட்டம் 2026 எனப் பல முக்கிய நிகழ்வுகளிலும் என் பங்களிப்பை வழங்குவதற்கு இத்துறை எனக்கு வாய்ப்பளித்தது.
“என் தன்னம்பிக்கையையும் திறன்களையும் வளர்க்க இத்தகைய நல்வாய்ப்புகள் பெருந்துணை புரிகின்றன. இதழியல் சார்ந்த திறன்களோடு, பலதரப்பினருடன் பழகும் விதம், ஆழ்ந்த சிந்தனை, உலகை இன்னும் ஆழமாகவும் தெளிவாகவும் பார்க்கும் பார்வை ஆகியவற்றையும் இந்த அனுபவம் பன்மடங்கு வலுப்படுத்தியுள்ளது.
“தொடர்ந்து தமிழ் முரசில் எனக்குக் காத்திருக்கும் இந்நீண்ட பயணத்தில், சமூகத்திற்கு என் பங்களிப்பை வழங்குவதோடு சிறந்த செய்தியாளராக என்னையும் மேம்படுத்திக்கொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன்,” என்றார் விஷ்ருதா.
வெங்கடேசன் வித்யா வட்சுமி: செய்தியுலகில் என் பயணம்
“வாரத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டில் செய்தித்தாள் வாங்குவோம். படிப்போம், ரசிப்போம், சிந்திப்போம். ஆனால், செய்தி எழுதுவதுமுதல் அதை அச்சுக்கு அனுப்பும்வரை, ஒரு செய்தித்தாள் உருவாகுவதற்குப் பின்னால் உள்ள செய்முறையை, கடந்த ஆறு மாதங்களில் நேரடியாகக் கற்றுகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
“செய்தியை இளையோரிடையே எளிய முறையிலும் சுவாரசியம் கலந்த முறையிலும் கொண்டுசேர்க்க வேண்டுமென்ற நோக்கில், சென்ற ஆண்டு இளைய தலைமுறை எனும் தளம் ஒன்று தொடங்கப்பட்டது.
“நான் தமிழ் முரசில் சேர்ந்த புதிதில், இளைய தலைமுறையின் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். ஒரு செய்தியில் உள்ள புள்ளிவிவரங்களை எளிதில் அள்ளிக் குவித்து விடலாம். ஆனால், இளையோரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் படைப்பது எப்படி என்று இளைய தலைமுறையில் பணிபுரியும் செய்தியாளர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
“காணொளித் தயாரிப்புமுதல் படைக்கும் பாணிவரை என்னுடைய படைப்புகளை மெருகுபடுத்தி, எனக்கு ஊக்கம் அளித்தவர்கள் அவர்களே.
“தற்போதைய சூழலுக்குத் தேவையான செய்திகளை மட்டும் இளையோருடன் பகிரலாம் என்ற மனப்போக்கில் நான் இருந்தேன். ஆனால், நடப்பு விவகாரங்களைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனும் கருத்து செய்தியின் முக்கியத்துவத்தை எனக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது.
“அதன் பிறகு, படிப்படியாகத் தமிழ் முரசின் அன்றாட நாளிதழ்களுக்கு எழுதத் தொடங்கினேன். ஒரு செய்தியின் மையக் கருத்து என்ன, அச்செய்தியில் உள்ள கருத்துகளை எவ்வாறு அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துவது என்று நான் கற்றுகொண்டேன்.
“பல பின்னணிகளைச் சேர்ந்தோருடன் பேசிப் பழகும் வாய்ப்பு சில பணியிடங்களில் மட்டுமே கிடைக்கும். அப்படிப்பட்ட வேலையிடங்களில், தமிழ் முரசும் ஒன்று.
“பலதரப்பட்ட மனிதர்களிடம் பேசினேன்; அவர்களது கதைகளைத் தெரிந்துகொண்டேன்; என்னுடைய உலகப் பார்வை மாறியது, மாறிக்கொண்டே இருக்கிறது.
“இன்று செய்தித்தாளைப் படிக்கும் ஒவ்வொரு முறையும், அதன் பக்கங்களில் அச்சிடப்பட்டிருப்பவை செய்திகள் மட்டுமல்ல; எண்ணற்ற மனிதர்களின் கதைகள், செய்தியாளர்களின் முனைப்பு, உண்மைத்தன்மையைக் கடைப்பிடிக்கும் குறிக்கோள் என்பதை ஒரு புதிய பார்வையுடன் உணர்கிறேன்.
“ஒரு வாசகராகத் தொடங்கிய எனது பயணம், கதைகளைத் தேடி, எழுதி, சமூகத்துடன் பகிரும் செய்தியாளராக என்னை இந்த வேலைப் பயிற்சி உருமாற்றியுள்ளது,” என்று வித்யா பகிர்ந்துகொண்டார்.
யுகேஷ் கண்ணன்: தமிழ் முரசுக்கு ஒரு மடல்
“செய்தித்தாளில் நமது பெயர் எப்போதேனும் வந்துவிடாதா என்ற ஏக்கம் கடந்து, இப்போது தினமும் என் பெயரைச் செய்தித்தாளில் பார்ப்பது வர்ணிக்கமுடியா நெகிழ்ச்சியைத் தருகிறது.
“ஒரு பத்திரிகையாளராக நான் எழுதும் செய்திகளும் கதைகளும் அச்சிடப்பட்டு, வாசகர்களின் பார்வைக்குச் செல்கின்றன. சிறுவயதில் யாரேனும் என்னிடம், “நீ எதிர்காலத்தில் இந்த வேலையைத்தான் செய்ய போகிறாய்,” என்று கூறியிருந்தால் அவர்களைப் பார்த்து சிரித்திருப்பேன்.
“அப்போது தமிழின்மீது ஆர்வம் இருந்ததே தவிர, செய்தியின்மீது அல்ல. அந்த ஆர்வத்தையும் வேட்கையையும் எனக்குள் உருவாக்கியது தமிழ் முரசு.
“தேசிய சேவை முடிந்த பின்னர், திசையறியாப் பட்டமாகச் சுற்றித் திரிந்த எனக்கு வழிகாட்டும் நூலாக மாறியது தமிழ் முரசின் உபகாரச் சம்பளம். பல்கலைக்கழகக் கல்விக்காகப் பலதரப்பட்ட உபகாரச் சம்பளங்களைத் தேடிச்சென்றபோது, தமிழ் முரசின் உபகாரச் சம்பளம் தற்செயலாகத் தென்பட்டது.
“தமிழ்மீதான ஆர்வத்தில் விண்ணப்பித்துவிட்டேன். அதைத் தொடர்ந்த 2.5 மாத வேலைப்பயிற்சிக் காலத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்.
“பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பல்வேறு மக்களின் கதைகளைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களின் கதைகளையும் உணர்ச்சிகளையும் என் எழுத்துவழி பலருக்குக் கொண்டுசேர்க்க முடிவதை உணர்ந்தேன். செய்தி துறையின்மீதான ஆர்வம் அப்போது பிறந்தது.
“தமிழ் முரசு என்மீது நம்பிக்கை வைத்து அதன் முதல் உபகாரச் சம்பளத்தை எனக்கு வழங்கியது. 21 வயதில் மாணவச் செய்தியாளராகத் தொடங்கிய இந்தப் பயணம் இப்போது 25 வயதில் முழு நேரச் செய்தியாளராகத் தொடர்கிறது.
“இதற்கிடையே, ஒவ்வோர் ஆண்டும் இரண்டு மாத வேலைப்பயிற்சிக்குத் திரும்பும்போது வெவ்வேறு புதிய அனுபவங்கள். காணொளி தயாரித்தலில் தொடங்கி முதற்பக்க செய்திகள் எழுதுவது வரை, ஒவ்வொரு நாளும் ஒரு புது கற்றல் பயணமாக இருந்துள்ளது.
“என் நண்பர்கள் பலர் என்னிடம் அவர்கள் அன்றாடம் ஒரே வேலையைச் செய்வது போல் தோன்றுவதாகப் புலம்புவர். ஆனால், எனக்கு அந்தக் குறையில்லை.
“ஏனெனில், எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கற்றல், புதிய சவால், புதிய வாய்ப்பு,” என்று பெருமையுடன் கூறினார் யுகேஷ்.
காமாட்சி சந்திரசேகர்: சமுதாயத்தின் குரலாய், தமிழோடு என் பயணம்
“இள வயதில் வாழ்க்கை என்ற புதரில், திசை தெரியாமல் திணறி நின்ற எனக்கு வழிகாட்டியாக இருந்தது தாய்த் தமிழே.
“கூச்ச சுபாவம் கொண்ட 12 வயதுச் சிறுமியாக இருந்த எனக்கு, நான் தமிழில் ரசித்த கதைகள், கவிதைகள், பாடல்கள், திரைப்படங்கள் என அனைத்தும், இன்று தலைநிமிர்ந்து நடக்கும் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளன.
எனக்குப் பெரும் உந்துசக்தியாக இருந்த இம்மொழிவழி நானும் தமிழ் சமுதாயத்தில் திசை தெரியாமல் தவிப்போர்க்கு ஊக்கமாகத் திகழ வேண்டும் என்ற ஒரே கனவோடு பல ஆண்டுகளைக் கடந்தேன்.
“தொடக்கக்கல்லூரி பயணத்தை முடித்தபின், அந்தக் கனவை நனவாக்கும் தீரா வேட்கையுடன் முதன்முதலாக தமிழ் முரசு அலுவலகத்தினுள் காலெடுத்து வைத்தேன்.
“சமுதாயத்தின் குரலாக, ஐந்து மாதங்களுக்கு முன்பு நான் என் பணியைத் தொடங்கினேன். இளைய தலைமுறை என்ற இளையருக்கான தளத்திற்காகப் பதிவுகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டேன்.
“தமிழ் முரசு நாளிதழில் பத்திரிகையாளராகவும் பணியாற்றிய அனுபவம், சமூகத்தில் பலராலும் பேச மறுக்கப்பட்டு, மறைக்கப்படும் முக்கியப் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஓர் உன்னதமான வாய்ப்பையும் எனக்கு வழங்கியது.
“தமிழ் மொழி மாதம். என் பயணத்தின் மற்றொரு முக்கிய அனுபவம். 15 மாணவச் செய்தியாளர்களுடன் இணைந்து நான் பல்வேறு நிகழ்வுகளில் செய்தியாளராகக் கலந்துகொண்டேன். தமிழ்ச் சமுதாயத்தை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கும் வாய்ப்பை எனக்கு இது அளித்தது.
“தமிழ்மொழி விழாவின் இறுதி நிகழ்வாக ‘முரசு 360’ என்ற நிகழ்ச்சியின் ஏற்பாடுகளிலும் நான் கலந்துகொண்டேன். 40க்கும் மேற்பட்ட நிகழ்வுகளைக் காணொளிகளாகத் தொகுத்துப் படைக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். இந்தப் பணி, சமூகச் சேவை என்பதையும் நன்கு உணர்ந்தேன்,” என்று காமாட்சி பகிர்ந்துகொண்டார்.

