கடந்த 2025ஆம் ஆண்டு இந்தியத் தூதரகத்தின் சார்பாக சிங்கப்பூர்த் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த இந்தியத் திரைப்பட விழாவிற்குப் பேராதரவு கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, இவ்வாண்டு இரண்டாவது முறையாக சிங்கப்பூரில் அவ்விழா மீண்டும் நடத்தப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம் உள்ளிட்ட எட்டு இந்திய மொழிகளில் உருவான 21 திரைப்படங்கள், ஜனவரி 23ஆம் தேதிமுதல் மார்ச் 8ஆம் தேதிவரை, சன்டெக் சிட்டி, ‘கோல்டன் வில்லேஜ்’ திரையரங்கில் திரையிடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வார இறுதியும் மூன்று திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இவ்வாண்டு, 1970லிருந்து இப்போதுவரை வெளியிடப்பட்ட, ‘ரோஜா’, ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’, ‘சூரரைப் போற்று’ போன்ற விருது பெற்ற திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்தியத் திரையுலகின் கலாசாரப் பன்முகத்தன்மை, இந்தியத் திரைப்படங்களின் நீடித்த ஈர்ப்புத்தன்மை, மொழிகளின் வளமை, மொழிகள் கடந்தும் உலகளாவிய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்பட நுணுக்கங்கள் உள்ளிட்ட பலவற்றைக் கொண்டாடும் நோக்கிலும், இந்தியா - சிங்கப்பூர் இடையே கலாசார பரிமாற்றத்திற்கான ஒரு தளமாக அமையும் நோக்கிலும் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“திரைப்படங்கள் மக்களை ஒன்றிணைக்க ஒரு சிறந்த தளம் என்பதாலும், இதுபோன்ற திரைப்படத் திருவிழாக்கள் இளையர்களை தங்கள் பண்பாட்டுடனும் ‘தமிழர்’ என்ற அடையாளத்துடனும் இணைக்க உதவுகின்றன என்பதாலும் இத்திரைப்பட விழா ஒரு சிறப்பான நிகழ்ச்சி,” என்றார் அபயா சிவகுமார்.
பிப்ரவரி 22ஆம் தேதியன்று திரையிடப்பட்ட சுதா கொங்கராவின் இயக்கத்தில், சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம், பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், விமானச் சேவை நிறுவன அதிபரான கதைக்களத்தைக் கொண்ட திரைப்படமாகும்.
தொழில் முனைவராகச் சாதிக்க விரும்புவோர்க்கு மட்டுமல்லாமல் வாழ்வில் துணிச்சலுடன் இலக்குகளை அடைய போராடுபவர்களுக்கும் இத்திரைப்படம் முனைப்பூட்டுவதாக அமையும்.
தொடர்புடைய செய்திகள்
“வாழ்வின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும், ஒருவரால் இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் பல கருத்துகளுடன் தொடர்புபடுத்த முடியும்,” என்கிறார் ஆத்மிக்கா லட்சுமி.
அதுபோன்ற திரைப்படங்கள் ஆண்டுகள் கடந்தும் மக்கள் மனங்களில் இன்னும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன.
“திரைப்படங்கள் மக்களின் வாழ்வை எடுத்துக்காட்டும் கண்ணாடிபோல் இருப்பதால், காலம் கடந்தும் அவை மக்களால் இன்றும் விரும்பப்படுகின்றன,” என்றார் சாதனா ரமேஷ்.
‘சூரரைப் போற்று’ நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட திரைப்படம். அதனால், சிங்கப்பூரில் முதன்முறையாக அத்திரைப்படம் திரையரங்கத்தில் திரையிடப்பட்டதும், மக்கள் ஆவலுடன் அதனைக் காணத் திரண்டனர்.
“‘சூரரைப் போற்று’ போன்ற பல விருதுகளைப் பெற்ற திரைப்படம், வெளியான சில ஆண்டுகளுக்குப்பின் திரையரங்கத்தில் மீண்டும் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்றதைக் கண்டதில் மகிழ்ச்சி,” என்று சொன்னார் ஹேமா வினோதினி.
இவ்விழாவின் மூலம் இந்தியத் திரைப்படங்கள் சிங்கப்பூர் மக்களிடையே அங்கீகாரமும் ஆதரவும் பெறுவதுடன், அவர்களுக்கு அவை பொழுதுபோக்காகவும் அமைகின்றன. மேலும், அத்திரைப்படங்கள் இந்தியா முழுவதுமான கதை சொல்லும் மரபுகளின் செழிப்பையும் வெளிப்படுத்துகின்றன. அவற்றைக் கொண்டாடுவதிலும் கட்டிக்காப்பதிலும் இந்தத் திரைப்பட விழா முக்கியப் பங்காற்றுகிறது.

