சிங்கப்பூரில் குழந்தைகளிடையே ஆரம்பகால வளர்ச்சி தாமதமாகும் சம்பவங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இரட்டிப்பாகி உள்ளன.
பரபரப்பான சிங்கப்பூர்ச் சூழலில் இத்தகைய பல ஆரம்பகால மருத்துவச் சிக்கல்களுக்கு, பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையிலான நல்லுறவு மருந்தாகலாம் என்கிறார் ஐம்பதாண்டுக்கும் மேலான அனுபவமுடைய குழந்தைநல மருத்துவர் க. வெள்ளையப்பன்.
இவர் 42 ஆண்டுகளாக ‘ஐபிசிஏ’ எனப்படும் அனைத்துலக குழந்தை, சிறுவர், வளரிளம் பருவத்தினர் மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
குழந்தைகளின் ஆரம்பகட்ட மருத்துவத் தேவைகளை அறிந்து, வளர்ச்சி மைல்கற்களைக் கண்காணித்து, பதின்ம வயது வரை பிள்ளைகளுக்கு முழுமையான பராமரிப்பு வழங்கிவரும் ‘ஐபிசிஏ’ மருந்தகம், ‘பார்க்வே’ மருத்துவ நிலையத்துடன் இணையவிருக்கிறது. இதையடுத்து, தற்போது செயல்படும் அங் மோ கியோ பகுதியிலிருந்து பிடாடாரி பார்க்குக்கு அது மாறும்.
குழந்தைகள், சிறுவர்கள், வளரிளம் பருவத்தினருடன் பெற்றோருக்கும் மேம்பட்ட சேவையை வழங்க ஆவலோடு காத்திருக்கின்றனர் ‘ஐபிசிஏ’ மருத்துவர்கள். பலதுறை மருத்துவ நிலையமான ‘பார்க்வே மெடிசென்டரில்’ உள்ள கூடுதலான ஆய்வுக்கூட வசதிகள் முதலியன சேவைத்தரத்தை மேம்படுத்தும் என்று கூறப்பட்டது.
டாக்டர் வெள்ளையப்பன், தமது ‘ஐபிசிஏ’ சேவையில் தற்போது மூன்றாம் தலைமுறைக் குழந்தைகளைப் பார்த்து வருகிறார். அன்றாட வாழ்க்கையில் சிறுவர்களைக் கண்டு, உறவாடுவது 79 வயதாகும் அவரை இன்னும் இளமையாக வைத்துள்ளது. அதேநேரம், 1970களைக் காட்டிலும் பெரிதும் மாறுபட்டுள்ள சமூக, உலகச் சூழலில் நவீன மருத்துவச் சிக்கல்களையும் அவர் காண்கிறார்.
குழந்தைகளுடன் செலவிடும் நேரமும் சேர்ந்து ஈடுபடும் நடவடிக்கைகளும் குறைந்ததால், அண்மைக் காலத்தில் பிள்ளைகள் பேசுவது தாமதமடைவதாக டாக்டர் வெள்ளையப்பன் தெரிவித்தார். மின்னிலக்கச் சாதனங்கள், ஒருவருக்கொருவர் செலவிடும் நேரத்தை ஈடுசெய்ய வல்லதல்ல என்றார் அவர்.
‘ஐபிசிஏ’ மருந்தகத்தின் மற்றொரு மருத்துவரான டாக்டர் ஏக்னஸ் டே, உடல் எடைச் சிக்கல்கள், மனப்பதற்றம் மனச்சோர்வு முதலிய உளவியல் சிக்கல்களையும் மின்னிலக்கப் பாதிப்புகளாகக் குறிப்பிட்டார். ஆரம்பகட்டத் தலையீடுகள் இதற்கு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
அதிக மருத்துவத் தகவல்களும் ஆய்வுகளும் இணையத்தில் பரவலாகிவருவது ஒரு சிக்கலாக முளைத்துள்ளது. தாங்களாகவே ‘பாராசிட்டமால்’ போன்ற மருந்து, மாத்திரைகளைக் குழந்தைகளுக்குத் தரும் பெற்றோர் சிலர் தாமதமாக மருத்துவ உதவி நாடுகின்றனர். கூகலையும் இணையத்தையும் பெற்றோர் அதிகமானோர் சார்ந்திருப்பதைக் குறிப்பிட்டு எச்சரித்தார் அவர்.
உலக அளவில் குழந்தைநல மருத்துவத்தில் சிங்கப்பூர் பன்மடங்கு முன்னேறி, கோலோச்சி வருவது டாக்டர் வெள்ளையப்பனுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
முன்னர், பரவலாகக் காணப்பட்ட அம்மை, காசநோய் போன்ற தொற்றுநோய்களுக்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு இவற்றின் தாக்கம் பெரிதும் குறைந்துள்ளது. உலகிலேயே குறைவான குழந்தை இறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் அடங்கும்.
சிங்கப்பூரர்களின் வாழ்வாதாரமும் வாழ்க்கைத்தர முன்னேற்றமும் குழந்தைகளிடையே ஊட்டச் சத்தையும் எதிர்ப்பாற்றலையும் அதிகரித்துள்ளன. ஆஸ்துமா, உடற்பருமன், புற்றுநோய் முதலியன தற்போது அதிகம் பாதிக்கும் நோய்கள் என்றார் டாக்டர் வெள்ளையப்பன்.
‘ஐபிசிஏ’ மருந்தகத்தின் உடனடி மருத்துவ சேவைகளில் பணியாற்றிய அனுபவங்கள் தம் மருத்துவப் பயணத்துக்கு மேலும் அர்த்தம் கூட்டுபவை என்கிறார் இவர். மூச்சுத் திணறல், வலிப்பு, ஆஸ்துமா போன்ற பாதிப்புகளுடன் ‘ஐபிசிஏ’வுக்கு வந்த சிறுவர்களில் சிலர் உயிர்வாயு அளவு குறைந்ததால் உடல் நீலநிறமாய் மாறும் தீவிரநிலைக்குத் தள்ளப்படுவதை டாக்டர் வெள்ளையப்பன் கண்டுள்ளார். அத்தகையோரை உடனடியாகப் பரிசோதித்து, சிகிச்சை அளிக்கும் வளங்களும் மருத்துவ நிபுணத்துவமும் ‘ஐபிசிஏ’வில் உண்டு.
தேசியச் சுகாதார மின்பதிவுகளோடு இணையும் மின்னிலக்க மருத்துவப் பதிவுமுறைக்கு ‘ஐபிசிஏ’ வெற்றிகரமாக மாறியதை முக்கிய மைல்கல்லாகக் கருதுகிறார், கடந்த ஓராண்டாக அங்குப் பணிபுரியும் டாக்டர் காவ் பாவ்-டாங். விரைவான சிகிச்சை, மருத்துவப் பராமரிப்பை மேம்படுத்த இது உதவுவதாக அவர் கூறினார்.
புதிய ‘ஐபிசிஏ’ மருந்தகம் ஆஸ்துமா, தோல் அழற்சி முதலிய நாட்பட்ட நோய்கள், ஒவ்வாமை, உடல் எடைப் பராமரிப்பு போன்றவற்றுக்கு மருத்துவ ஆதரவு அளிக்கும். ஆரம்பநிலைத் தடுப்பூசி சேவைகளுக்கும் அதை நாடலாம்.
சிங்கப்பூரர்களாக உள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசி சேவைகள், வளர்ச்சிப் பரிசோதனைகளுக்கான சுகாதார அமைச்சின் சலுகைகள் வழங்கப்படும். தீவிர நோய்களுக்கும் காயங்களுக்கும் வெளிநோயாளிப் பராமரிப்பு, குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சைகள் ஆகியவையும் ‘ஐபிசிஏ’வின் சேவைகளில் அடங்கும்.
“அடுத்த தலைமுறையினர் சிங்கப்பூரின் முக்கிய வளம். அவர்களுக்கு உடலளவிலும் உணர்வளவிலும் ஆரோக்கியமான தொடக்கத்தைத் தருவதால் அவர்களின் வருங்கால ஆக்கத்தில் சுகாதாரச் சிக்கல்கள் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்ளலாம்,” என்கிறார் டாக்டர் வெள்ளையப்பன்.