தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலக மேடையில் தடம் பதிக்கும் ‘ராயல் கிங்ஸ்’ குழுமம்

4 mins read
17ad3016-4d05-4e5a-b8bc-d9f54cb16f69
ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனர் சிராஜுதீன் (இடது), நிர்வாக இயக்குநர் செல்வதுரை ஆள்மான். - படம்: ராயல் கிங்ஸ் குழுமம்.

அனைத்து ஆசிய நாடுகளிலும் தொழில் ஆலோசனை அலுவலகத்தை அமைத்து, தங்கள் நிறுவனத்தை உலக மேடையில் நிலைநிறுத்த வேண்டும் என்ற இலக்கோடு ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது ‘ராயல் கிங்ஸ்’ குழுமம்.

இதே நோக்கத்தோடு ஒரு மாதத்திற்கு முன்பு குழுமத்தின் நிர்வாக இயக்குநராக இணைந்துள்ளார் திரு செல்வதுரை ஆள்மான், 59.

ஆசியாவின் முன்னணி தொழில் ஆலோசனை நிறுவனமாகும் முயற்சிக்கு வித்திட்டு, ‘ராயல் கிங்ஸ்’ குழுமத்தை உயர்த்தி செல்லவிருக்கிறார் இவர்.

ஆசிய நாடுகளில் விரிவாக்கம்

குறிப்பாக, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சீனா போன்ற வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் குவிந்து கிடக்கும் திறமைகளை உலகளாவிய நிறுவனங்களின் மையமாக திகழும் சிங்கப்பூரோடு இணைப்பதே முதன்மைத் திட்டம் என்றார் திரு செல்வதுரை.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுடன் 1997ஆம் ஆண்டு திரு செல்வதுரை ஆள்மான் எடுத்த புகைப்படம். 
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுடன் 1997ஆம் ஆண்டு திரு செல்வதுரை ஆள்மான் எடுத்த புகைப்படம்.  - படம்: செல்வதுரை ஆள்மான்.

ஆசிய நாடுகளில் இருக்கும் வெவ்வேறு துறைகளை சேர்ந்த சிறிய, நடுத்தர தொழில்களோடு கூட்டணிகளை உருவாக்கவுள்ளது ராயல் கிங்ஸ்.

அதோடு, எவ்வாறு வெளிநாட்டில் தங்கள் தொழில்களை விரிவாக்குவது என்றறியாது தடுமாறும் சிறிய இந்திய நிறுவனங்களுக்கு உதவி, அவர்களுக்கான ஒரு பாதையை அமைத்து கொடுப்பதும் ராயல் கிங்ஸ் குழுமத்தின் முக்கிய குறிக்கோள்களுள் ஒன்று.

தென் இந்தியாவிலும் குஜராத் மாநிலத்திலும் தொழில் ஆலோசனை அலுவலகம் அமைக்கப்பட்டு தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

2019ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் திரு செல்வதுரை ஆள்மான். 
2019ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் திரு செல்வதுரை ஆள்மான்.  - படம்: செல்வதுரை ஆள்மான்.

சிங்கப்பூர் - இந்தியாவின் இருதரப்பு ஒத்துழைப்புக்கான 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்தியாவின் திறமைகளை 10இலிருந்து 15 விழுக்காடு மட்டுமே சிங்கப்பூர் பயன்படுத்தி உள்ளது என்றெண்ணுகிறார் திரு செல்வதுரை.

எனவே, இந்தியாவின் பொருளாதாரத்தையும் திறமைகளையும் நயம்பட பயன்படுத்தும் தளமாக ‘ராயல் கிங்ஸ்’ திகழும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனுபவமும் செல்வாக்கும்

திரு செல்வதுரையின் அனுபவமும் விரிவான தொடர்பு கட்டமைப்பும் ‘ராயல் கிங்ஸ்’ குழுமத்தின் இந்த விரிவாக்கத்திற்கு அடிநாதமாய் விளங்குகிறது.

2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மென்பொருள் சேவை குறித்த ஆக பெரிய சீன-இந்திய ஒத்துழைப்பு திட்டத்தின் ஆலோசகராக பணியாற்றியவர் அவர்.

2005ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தில் ஒரு எஃகிரும்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

அந்த காலகட்டத்தில், ஊழியர்களோடு சிக்கல் ஒன்று ஏற்பட்டதாகவும், அன்றைய குஜராத் முதலமைச்சரும் இன்றைய இந்திய பிரதமருமான திரு நரேந்திர மோடி தனக்கு தனிப்பட்ட முறையில் சிக்கலைத் தீர்க்க உதவியதை நினைவுகூர்ந்தார் திரு செல்வதுரை.

இவ்வாறு பல ஆண்டுகளாக வெவ்வேறு துறைகளை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி, முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வந்த திரு செல்வதுரையின் பங்கு ராயல் கிங்ஸ் குழுமத்தின் வளர்ச்சியில் இன்றியமையாததாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

“அண்ணன் பல நிறுவனங்களில் முக்கியமான பொறுப்புகளில் இருந்துள்ளார். அவரது அனுபவத்திலிருந்து பலவற்றை கற்றுக்கொள்ளவேண்டி இருக்கிறது,” என்றார் ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனர் திரு சிராஜுதீன் சையது முகம்மது.

மீண்டும் நிறுவன உலகம்

வேலையிலிருந்து விலகி இருந்த திரு செல்வதுரை, மீண்டும் நிறுவன உலகினுள் நுழைந்ததற்கு, அவர் ‘ராயல் கிங்ஸ்’ குழுமத்திடமும் சிராஜுதீனிடமும் கண்டறிந்த பெரும் ஆற்றலே காரணம்.

“இளம் தொழிலாளராக அயராது உழைத்து நிறுவனத்தை மேல்நோக்கி கொண்டுசெல்லும் அதே நேரத்தில், சமூகத்திற்கும் தொடர்ந்து உதவி வரும் சிராஜுதீனின் பணியும் அவரது உத்வேகமும் என்னை மிகவும் கவர்ந்தது” என்றார் திரு செல்வதுரை.

இப்படிப்பட்ட நிறுவனம் உயர்வதற்கு தன்னால் முடிந்த பங்கை ஆற்ற வேண்டும் என்ற எண்ணமும் தொடர்ந்து இடையூறுகளை முறியடிக்க வேண்டும் என்ற வேகமும் ராயல் கிங்ஸ் குழுமத்தில் செல்வதுரையின் பயணத்தை துவக்கி வைத்துள்ளது.

சந்திக்கவிருக்கும் சவால்களை முறியடித்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்குவதாக உறுதியெடுத்துள்ள இவர், 24 மணி நேரமும் அவரது மூளைக்கு வேலை கொடுத்து தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருப்பதில் மனநிறைவடைகிறார்.

2019ஆம் ஆண்டு புகழ்பெற்ற டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுடன் திரு செல்வதுரை ஆள்மான். 
2019ஆம் ஆண்டு புகழ்பெற்ற டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுடன் திரு செல்வதுரை ஆள்மான்.  - படம்: செல்வதுரை ஆள்மான்.

தனது அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்ட படிப்பினைகளை சிராஜுதீனுக்கு கடத்த விழைகிறார் செல்வதுரை.

இளம் வேகத்தையும் பல்லாண்டு அனுபவத்தையும் இரு தூண்களாக நிலைநிறுத்தி, ராயல் கிங்ஸ் குழுமம் பெரும் உயரங்களை தொடவிருக்கிறது.

சமூக நோக்குடன் தொடரும் 12 ஆண்டுப் பயணம்

10 ஆண்டுகள் நாணய மாற்றுத் துறையில் பணியாற்றிய பிறகு, 2013ஆம் ஆண்டு ராயல் கிங்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தைப் பதிவு செய்தார் திரு சிராஜுதீன்.

50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், வாடிக்கையாளர்கள், சமூக தலைவர்கள் நண்பர்களோடு ‘ராயல் கிங்ஸ்’ குழுமம் ஜூலை 29ஆம் தேதி அதன் 12ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், வாடிக்கையாளர்கள், சமூக தலைவர்கள் நண்பர்களோடு ‘ராயல் கிங்ஸ்’ குழுமம் ஜூலை 29ஆம் தேதி அதன் 12ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடியது. - படம்: ராயல் கிங்ஸ் குழுமம்.

தங்கக் கட்டிகளை விற்கும் தொழிலோடு தொடங்கிய ராயல் கிங்ஸ், 2019ஆம் ஆண்டு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தையும் நிறுவியுள்ளது.

இன்று கணக்கியல், பட்டயக் கணக்கு, தொழில் ஆலோசனை, நிறுவனப் பதிவு, பொது வணிகம் என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது.

12 ஆண்டுகளுக்கு முன் தங்க கட்டிகளை மொத்தமாக விற்பனை செய்து வந்த சிராஜுதீன், ஈராண்டுகளுக்கு முன் தன் தங்க விற்பனை உரிமத்தை ஒப்படைத்து அத்தொழிலை விட்டுக்கொடுத்தார்.

ஆனால், தன் முதல் அலுவலகம் அமைக்கப்பட்ட சிராங்கூன் சாலைக்கே மீண்டும் சென்று, அங்கு ஒரு நகை கடையை திறக்க வேண்டும் என்பதே அவரது ஆசை.

இதற்கான திட்டத்தை வகுத்து, வாய்ப்புக்கும் சரியான நேரத்திற்கும் காத்திருப்பதாக தெரிவித்த அவர், ராயல் கிங்ஸ் குழுமத்தின் 15ஆவது ஆண்டு நிறைவிற்குள் இத்திட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவார் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு வர்த்தகத்தை வளர்க்கும் அதே நேரம், ‘பொருள் ஈட்டுவது தனக்காக அல்ல, மற்றவர்களுக்கு திருப்பி கொடுப்பதற்கே’ என்ற முழக்கவரியை தாரக மந்திரமாக கொண்டு, சமூகத்திற்கு தொண்டாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார் திரு சிராஜுதீன்.

“சமுதாயத்திற்கு பங்காற்றுபவர்கள் மிகவும் குறைவு. இந்நிலையில், அனைவரும் சுயநலமாக இருக்க முடியாது” என்றார் அவர்.

ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனர் சிராஜுதீன்.
ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனர் சிராஜுதீன். - படம்: ராயல் கிங்ஸ் குழுமம்.

தமிழ் மொழி, இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் இவர், சிண்டா போன்ற கல்வி சார்ந்த அமைப்புகளுக்கும் ஸ்ரீ நாராயண மிஷன் போன்ற சமூக அமைப்புகளுக்கும் நன்கொடை வழங்கி வருகிறார்.

இந்த போக்கைப் பாராட்டி, “சமூகத்திற்கு திருப்பி கொடுக்கும் போது தான், பணம் ஈட்டுவதை விட அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது” என்றார் திரு செல்வதுரை. “பெருமளவில் சமூகத்திற்கு சேவை செய்ய, அதிக பணம் ஈட்ட வேண்டும். அதை நோக்கியே எங்கள் பயணம் அமையும்” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்