மலேசியாவின் தமிழ் நேசன் நாளிதழ் மூடப்படுகிறது என அதிர்ச்சித் தகவல்

மலேசியாவில் வெளிவரும் தமிழ் நேசன் நாளிதழ். படம்: செல்லியல்

கோலாலம்பூர் – உலகின் மிகப் பழமையான தமிழ் நாளிதழ்களில் ஒன்றான தமிழ் நேசன் வரும் ஜனவரி 31-ஆம் தேதியோடு மூடப்படும் என மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிட்டத்தட்ட 95 ஆண்டுகள் பழமையான தமிழ் நேசன் ஒரு காலக்கட்டத்தில் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் வாசகர்களால் அதிகமாக விரும்பிப் படிக்கப்பட்ட நாளிதழ்களில் ஒன்று.

உலகமெங்கும் அச்சில் வெளிவரும் பத்திரிக்கைகள் கடும் வர்த்தகப் பிரச்சனைகள் காரணமாக மூடப்பட்டு வரும் வரிசையில் தமிழ் நேசனும் இணைகின்றது என்று மலேசியாவின் 'செல்லியல்' இணையத்தளம் குறிப்பிட்டது. 1979-ஆம் ஆண்டில் திரு ச.சாமிவேலு மலேசியாவின் மஇகா கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆண்டுகளில் தமிழ் நேசனை விலைக்கு வாங்கினார். அப்போது முதல், இப்போது வரை தமிழ் நேசன் திரு சாமிவேலு குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என்றும் செல்லியல் இணைத்தளம் தெரிவித்தது.

தற்போது மலேசியாவில் தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமிழ் மலர் என குறைந்தது நான்கு நாளிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மலேசியாவின் மிகப் பழமையான நாளிதழ்களில் ஒன்றான தமிழ் நேசன் எதிர்வரும் ஜனவரி 31-ஆம் தேதியோடு நிறுத்தப்படும் எனும் செய்தி பல தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.