தனியாக நடித்தேன்: அனுபவம் பகிரும் சாந்தினி

2 mins read
9e82a93c-e610-46a1-8c37-a962ec1ca131
சாந்தினி - படம்: ஊடகம்
multi-img1 of 2

நடிகை சாந்தினி தமிழரசனை தமிழ் ரசிகர்களால் மறந்திருக்க இயலாது. பல படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும், பெரிய வெற்றி என்று குறிப்பிடத்தக்க வகையில் இதுவரை தமக்கு எந்த படமும் அமையவில்லை என்று வருத்தப்படுகிறார் சாந்தினி.

தற்போது ‘அமிகோ’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறாராம். இந்தப் படத்தின் கதையம்சம் மட்டுமல்ல, அது படமாக்கப்படும் விதமும் புதுமையாக இருப்பதாகச் சொல்கிறார்.

பொதுவாக படப்பிடிப்பில் நிறைய சக நடிகர்கள் இருப்பார்கள். அதனால் பொழுதுபோவதே தெரியாது. ஆனால் ‘அமிகோ’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நான் பங்கேற்கும் காட்சிகளை மட்டுமே படமாக்கினர்.

“இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒரே நடிகை நான் மட்டும்தான். துணை நடிகர்கள், மூத்த நடிகர்கள், கதாநாயகன் என உண்மையாகவே ஒருவர்கூட படப்பிடிப்பில் இடம் பெறவில்லை. சில நாள்கள் நான் மட்டுமே தனியாக நடித்தேன்,” என்கிறார் சாந்தினி.

இப்படத்தில் முதன்முறையாக மாடல் அழகி பாத்திரத்தில் நடித்துள்ளாராம். தாம் ஏற்கனவே ‘மிஸ் சென்னை’ அழகி போட்டியில் இறுதிச் சுற்று வரை பங்கேற்றதால் இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிதாக உள்ளது என்று சொல்பவர், படப்பிடிப்பில் பங்கேற்ற சில மாடல் அழகிகளுடன் அந்தத் துறை குறித்து பயனுள்ள வகையில் விவாதிக்க முடிந்தது என்கிறார்.

“எனது சிகை அலங்காரம், ஒப்பனை, ஆடைகள் ஆகிய அனைத்துமே வித்தியாசமாக மாறுபட்டதாக இருந்தன. அச்சுஅசலாக அழகிப் போட்டி நடைபெறும் அரங்கு ஒன்றை அமைத்திருந்தனர். இவை எல்லாம் என்னைப் பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றன. இதற்கு முன்பு நடித்த பல படங்களில் எனது சிகை அலங்காரம், ஒப்பனை ஆகியவற்றில் நான் அதிக கவனம் செலுத்தியதில்லை. ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.”

“ஒருவகையில் இதுபோன்ற கவர்ச்சியுடன் கூடிய கதாபாத்திரத்தில் நான் இதுவரை நடித்ததே இல்லை,” என்று உற்சாகமாகச் சொல்கிறார் சாந்தினி.

மாடல் அழகி பாத்திரத்துக்காக தாம் பல்வேறு அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருந்ததாக அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் மாடலாக நடித்திருப்பதாகவும் சொல்கிறார்.

“மாடல் அழகி பாத்திரம் என்றால் எளிதாக நடித்து விடலாம் என சிலர் கருதுகிறார்கள் அதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் உங்களுடைய உடல் எடை, உணவு முறை, முகப்பொலிவு என அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அப்போதுதான் ரசிகர்கள் மன நிறைவு கொள்வார்கள். எனவே இயக்குநர் தரப்பில் ஏதும் அறிவுறுத்தாத நிலையில் நானே அனைத்திலும் கவனம் செலுத்தியது இயக்குநர் பிரவீணுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது,” என்கிறார் சாந்தினி.

சென்னையில் நடந்த ‘அமிகோ’ படப்பிடிப்பு தினமும் இரவில்தான் நடந்ததாம். அதனால் தாம் உடலளவில் சோர்ந்து போனதாக சொல்கிறார்.

“அடுத்து ஒரு வாரத்துக்கு படப்பிடிப்பு இல்லை என்று இயக்குநர் சொன்ன போது படக்குழுவில் இருந்த அனைவரும் துள்ளி குதித்தோம். அடுத்து ஒரு வாரம் தூக்கத்தைவிட எனக்கு வேறு எதுவும் முக்கியமில்லை,” என்று சிரிக்கிறார் சாந்தினி.

குறிப்புச் சொற்கள்