படங்களின் எண்ணிக்கை பற்றி தமக்குக் கவலை இல்லை என்கிறார் நடிகை ருக்மணி வசந்த்.
தம்மால் அதிக படங்களில் நடிக்க முடியாது என்பதால் நல்ல படங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நடிப்பு என்பது விளையாட்டு அல்ல என்று குறிப்பிட்டுள்ள ருக்மணி, தனது மனம் ஒப்பாமல் எந்தப் படங்களிலும் நடிக்க முடியாது என்கிறார்.
“ஒரு நடிகையாக இருப்பதில் மனநிறைவு அடைகிறேன். என் திறமைக்கேற்ப சினிமாவில் ஏதாவது புதுமையாக செய்ய ஆசைப்படுகிறேன்.
“தேர்ந்தெடுத்து படங்கள் செய்வதால் நடிக்கிற ஒவ்வொரு நாளும் எனக்கு முக்கியம். எனக்குப் பிடித்தமான படங்களில் மட்டுமே நடிக்கிறேன்,” என்கிறார் ருக்மணி.
தாம் நடிக்க வேண்டிய காட்சிகளைப் பற்றி இயக்குநரிடம் கேட்பாராம். ஒரு காட்சிக்கான அவசியத்தை அவர் சரியாக உணர்த்திவிட்டால் அதுவே போதுமானதாம்.
“எனது கதாபாத்திரமும் படமும் நன்றாக வர வேண்டும் என்பதில் இயக்குநருக்கும் படக்குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பும் ஆசையும் உள்ளதோ, அதற்கு இணையானதாக எனது விருப்பமும் உள்ளது,” என்கிறார் ருக்மணி.
விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’, படத்தில் நடித்துள்ள இவர், அடுத்து சிவகார்த்திகேயனுடன் ‘மதராஸி’ படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
எங்கு சென்றாலும் ‘மதராஸி’ படம் குறித்துதான் அனைவரும் விசாரிக்கிறார்களாம்.
“இந்தப் படம் குறித்து நிறைய பேசலாம். ஆனால், தற்போதுள்ள சூழலில் என்னால் எதையும் கூற இயலாது. ஆனால், மிகத் தரமான, பொழுதுபோக்கான படைப்பில் நானும் எனது பங்களிப்பைத் தந்திருக்கிறேன். அந்த வகையில், எனக்கு மனநிறைவு உள்ளது.
“சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது நான் எதிர்பாராத ஒன்று. இதை எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்.
“விஜய் சேதுபதியைப் போலவே சிவாவும் மிகச் சிறந்த நடிகர். ‘மதராஸி’ பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நாடறிந்த இயக்குநர். அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுத்து தங்கள் திறமையை வெளிப்படுத்த அனுமதிக்கிறார்,” என்று பாராட்டுகிறார் ருக்மணி வசந்த்.