சிங்கப்பூருடனான தமது தொடர்பு நெடியது என்று கூறியுள்ளார் நடிகர் கருணாஸ்.
எங்கு வாழ்ந்தாலும் மொழி, இனம் குறித்த உணர்வு ஒன்றுதான் என்று கூறிய அவர், தமது கிராமத்தைச் சேர்ந்த பலரும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்தவர்கள் என்றார்.
தாம் தயாரித்து வெளியிட்டுள்ள சல்லியர்கள் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்காக சிங்கப்பூர் வந்துள்ள அவர், தமது திரைப்பயணம் குறித்தும் இத்திரைப்படம் குறித்தும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
“ஓர் இசையமைப்பாளராக வரவேண்டும் எனும் விருப்பம் இருந்தது. அதற்கான பயணத்தில் பாடகராகவும் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் விளங்கும் வாய்ப்புகள் கிடைத்தன. செய்யும் செயலைச் சிறப்பாகச் செய்யவேண்டும் எனும் உணர்வோடு செயல்படுகிறேன்,” என்றார் அவர்.
முழு நீள நகைச்சுவைப் படங்கள் வெற்றியடைந்ததைக் குறிப்பிட்ட அவர், “நகைச்சுவைப் படங்களில் நடிப்பதைவிட, அதை எழுதுவது கடினம். நகைச்சுவை எழுத்தாளர்களுக்குத் தமிழில் பஞ்சமிருப்பது மறுக்க முடியாதது. எழுத முன்வந்தால் நிச்சயமாக நடிக்க ஆசைதான்,” எனக் குறிப்பிட்டார்.
தமிழ்த் திரைத்துறையைப் பொறுத்தவரை பல பணிகளை ஒருவரே மேற்கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் பரவலாகியுள்ளது வேதனையளிக்கிறது என்றார் கருணாஸ்.
எழுத வரும் இளையர்களை ஊக்குவித்து அவர்கள் கதைகளை இயக்குநர்கள் படமாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
“தமிழ்த் திரையுலகில் நடித்து, பாடிச் சென்றவர் கருணாஸ் என்பதற்கு அப்பால், நிலைத்து நிற்கும் எதையேனும் செய்யவேண்டும் எனும் தேடல் இருந்தது. அதற்கான விடைதான் சல்லியர்கள் படம்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
இன விடுதலைக்காகப் போராடிய பெருமைமிகு தமிழர்களிடம் அறம் இருந்தது என்றும் அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் தேவை இருக்கிறதென்றும் குறிப்பிட்டார் அவர்.
“போரில் அடிபடும் வீரர்களுக்குச் சிகிச்சை செய்வோர் சல்லியர்கள். அவ்வாறு ஈழத் தமிழ்ப் போர்க்களத்தில், அடிபடுவது எதிர்த்தரப்பு வீரர்களாக இருந்தாலும் காப்பாற்ற வேண்டியது மருத்துவரின் கடமை எனும் அறம் இருந்தது. அத்தகையோர் குறித்த படம் இது,” எனச் சொன்னார் கருணாஸ்.
“பணம்தான் முதன்மையென்றால் இந்தப் படம் தயாரித்திருக்க மாட்டேன்,” என்று சொன்ன அவர், “இயன்றவரை ஓர் ஆவணம் ஏற்படுத்தும் நோக்கில் இப்படத்தைச் செய்தோம்,” என்றார்.
பெரும் பொருட்செலவின்றி எடுக்கப்பட்ட இப்படத்திற்குக் கருணாஸின் மகனும் நடிகருமான கென் இசையமைத்துள்ளார்.
“என்னைப் போலவே என் மகனுக்கும் பன்முகத்தன்மை இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டோம். பின்னணி இசையை நான் செய்துள்ளேன். உணர்வுபூர்வமான அனுபவம் அது,” என்றார் அவர்.
உண்மைக்கு நெருக்கமான இப்படம் சிங்கப்பூரில் திரையிடப்படுவது மகிழ்ச்சி என்றார் அவர். ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) மாலை கார்னிவல் சினிமாஸில் சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கருணாஸ் கேட்டுக்கொண்டார்.