தமிழ்த் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளாகத் தனது எதார்த்தமான நடிப்பால் முத்திரை பதித்துவருபவர் ‘தலைவாசல்’ விஜய்.
அண்மையில், ‘ஆனந்த விகடன்’ இதழுக்கு அளித்த நேர்காணலில், தனது திரையுலகப் போராட்டங்கள், அங்கீகார ஏக்கங்கள் குறித்து மனம்திறந்து பகிர்ந்துள்ளார்.
எந்தவிதத் திரைப்படப் பின்னணியும் இன்றி, திரைப்படக் கல்லூரியில் பயின்று நண்பர்கள் நாசர், ஜி.எம். சுந்தர் ஆகியோருடன் வாய்ப்புத் தேடி அலைந்த நாள்களை அவர் அந்த நேர்காணலில் நினைவுகூர்ந்தார்.
“தொடக்கத்தில் எதிர்கொண்ட சில ஏமாற்றங்களால் திரையுலகை விட்டே விலகி, நடனக் கலைஞர் சந்திரலேகா குழுவில் இணைந்து, தனது நடனத் திறமையை மெருகேற்றிக் கொண்டு, ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் நடனமாடியதையும் பின்னர் அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றியதையும் விவரித்துள்ளார் விஜய்.
பின்னர், நடிகரும் நண்பருமான நாசரின் பரிந்துரையால் இயக்குநர் செல்வாவின் ‘தலைவாசல்’ படத்தில் கிடைத்த வாய்ப்பு, அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்து ‘தேவர் மகன்’ வரை கொண்டு சென்றது.
நடிப்பை ஒரு தொழிலாகப் பார்க்காமல், கதாபாத்திரத்திற்குள் ஆழமாக ஊடுருவும் கலைஞராகத் தன்னை அடையாளப்படுத்துகிறார் தலைவாசல் விஜய்.
“நடிப்பை யாராலும் சொல்லிக்கொடுக்க முடியாது. அது உள்ளிருந்து உயிரைக் கொடுத்து வெளிப்படுவது,” என்று விவரிக்கும் அவர், மலையாளத்தில் ‘ஸ்ரீநாராயண குரு’ வேடத்தில் நடித்தபோது, மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தன்னை வியந்து பாராட்டியதையும் இன்றும் கேரள வீடுகளின் பூசையறைகளில் அந்தப் புகைப்படம் வணங்கப்படுவதையும் தனது வாழ்வின் பெரும் ஆசீர்வாதமாகக் கருதுவதாகக் கூறியுள்ளார்.
“எனது 35 ஆண்டுகாலக் கலைப்பயணத்தில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தும், இதுவரை ‘கலைமாமணி’ விருது உட்பட எந்த மதிப்புமிக்க விருதும் எனக்குக் கிடைக்கவில்லை.
“கேரள மாநில அரசின் விருதைப் பெற்ற எனக்கு, தாய்மண்ணான தமிழ்த் திரையுலகில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனினும், எந்தப் போட்டியிலும் சிக்காமல் எல்லா காலத்திலும் நிலைத்து நிற்கும் கலைஞனாகத் தொடர்வேன்,” என்று தெரிவித்துள்ளார் ‘தலைவாசல்’ விஜய்.
அண்மையில் இவர் நடித்த ‘ரிசார்ட்’ தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் தலைமைச் சமையல் கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துப் பரவலாகப் பாராட்டு பெற்றுள்ள ‘தலைவாசல்’ விஜய், அத்தொடரின் இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் நல்ல பாராட்டுகளைப் பெறும் எனக் கூறியுள்ளார்.
