இந்தியத் திரையுலகுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் புதிய சாதனை படைக்கவுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நவம்பர் 23ஆம் தேதி விமரிசையாக நடைபெற உள்ள 54வது அனைத்துலக எம்மி விருது வழங்கும் விழாவில், வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கலைத்துறையின் உச்சமாகக் கருதப்படும் இந்த உயரிய விருது மேடையில், இந்தியத் திரையுலகின் சார்பில் ஒரு நடிகர் நேரடியாகச் சென்று விருது வழங்குவது இதுவே முதல் முறை.
வட்டார எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே கிடைத்த மகுடமாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது.
அனைத்துலக எம்மி விருதுகள், அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்பட்டு, ஒளிபரப்பப்படும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள், கலைஞர்களை கௌரவிப்பதற்காக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 2016ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ‘பிரைம் டைம் எம்மி’ மேடையில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விருது வழங்கியிருந்தார்.
அதையடுத்து, 2024ஆம் ஆண்டு அனைத்துலக எம்மி விருது விழாவை பிரபல நகைச்சுவை நடிகர் வீர்தாஸ் வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கி கவனம் ஈர்த்தார்.
அந்த வரிசையில், அனைத்துலக எம்மி விருதை தன் கையால் வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமை பெறவுள்ளார் விஜய் சேதுபதி.
தனது இயல்பான நடிப்பாலும் கதைத் தேர்வில் காட்டும் தனித்துவத்தாலும் சாமானிய மக்களின் மனங்களைக் கவர்ந்த விஜய் சேதுபதி, தற்போது அனைத்துலக அளவிலும் தன் முத்திரையைப் பதிக்க உள்ளார்.
ஒரு தமிழ் நடிகர் இவ்வாறு உலக அரங்கில் அங்கீகரிக்கப்படுவது உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களிடையே பெருமித அலைகளை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையே, நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திகில் படமான ‘மகாராஜா’ ஹாலிவுட்டில் மறுப்பதிப்பு செய்யப்படுகிறது.
பாலாஜி தரனீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்த ‘ட்ரெயின்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. தெலுங்கு இயக்குநர் பூரி ஜகன்நாத் இயக்கத்தில் அவர் நடித்த ஸ்லம்டாக் படமும் விரைவில் வெளியாகிறது.
