ஓய்வு கிடைத்தால் போதும், மரக்கன்றுகளுடன் வெளியே கிளம்பிவிடுகிறார் நடிகர் சாயாஜி ஷிண்டே.
தினமும் பத்து மரக்கன்றுகளாவது நடவேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாகச் சொல்கிறார். காரணம், தன் தாயிடம் இவர் செய்துகொடுத்த சத்தியம்.
92 வயது தாயின் பாசத்திற்காக 6.5 லட்சம் மரங்களை நட்டு காடாக்கிய சாயாஜி, திரைப்படங்களில்தான் வில்லன், நிஜ வாழ்க்கையில் கதாநாயகன் என இயற்கை ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளில் மகாராஷ்டிரா முழுவதும் மரக்கன்றுகளை நட்டு, மரம் நடுவதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார் சாயாஜி.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவரது ஆரம்பகால வாழ்க்கை பெரும்போராட்டங்கள் நிறைந்தது.
கடந்த 1978ஆம் ஆண்டு இவர்களது குடும்ப நிலத்தை அணைத் திட்டத்திற்காக அரசு கையகப்படுத்தியதால் அதற்குப் பதிலாக நீர்ப்பாசனத் துறையில் சாயாஜிக்கு காவலாளி வேலை வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு கடந்த 2022ல்தான் இவர்களது குடும்பத்திற்கு மாற்று நிலத்தை அரசு வழங்கியது.
திரையுலகில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தபோதிலும், வெறும் புகழும் பணமும் மட்டுமே தனக்கு மனநிறைவைத் தரவில்லை என்று சாயாஜி ஷிண்டே நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

