தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிகைகள்... விருப்பங்கள்...

3 mins read
52cb7446-3657-4561-bf14-b5d7cafb6dfe
கீர்த்தி சுரேஷ். - படம்: ஊடகம்

நடிகர் நடிகைகளும்கூட சராசரி மனிதர்கள்தான். அவர்களுக்கும் பல விருப்பங்கள், ஆசைகள் என்பது உண்டு. பிரபல நடிகைகளின் பல்வேறு விருப்பங்கள் குறித்த தொகுப்பு இது.

ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு புத்தகங்கள் படிப்பது என்றால் மிகவும் பிடிக்குமாம். குறிப்பாக, துப்பறியும் கதைகள் என்றால், அவற்றைப் பார்த்த வேகத்தில் படித்து முடித்துவிடுவாராம்.

“நான் இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரின் தீவிர ரசிகை. ஸ்ரீதேவியின் அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன். திரையுலகம் மீது எனக்கு ஆசை ஏற்பட இருவரையும் முக்கிய காரணமாகக் குறிப்பிடலாம். விளையாட்டுத் துறையில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை மிகவும் பிடிக்கும்,” என அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா.

வெளியே செல்லும்போது கூடுமானவரை கருப்பு நிற உடைகளைத்தான் அதிகம் உடுத்துவாராம். சாக்லெட்டுகள், இத்தாலி நாட்டு ஐஸ்கிரீம்கள் என்றால் இவர் உருகிவிடுவார்.

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் பிடித்தமான கதாநாயகி ஸ்ரீதேவிதான். எனினும் இந்தப் பட்டியலில் வித்யா பாலன், பார்வதி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

ஆடை வடிவமைப்பிலும் நீச்சல் பயிற்சி பெறுவதிலும் இவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.

சிறு வயதில் நீச்சல் வீராங்கனையாக வலம்வந்தவர், பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.

“ஒரு நாள்கூட நீச்சல் பயிற்சி செய்யாமல் இருந்ததில்லை. எனினும், நடிகையான பிறகு அதில் கவனம் செலுத்த முடியவில்லை. விதவிதமான வாசனைத் திரவியங்கள், அம்மா சுடும் தோசை ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தமானவை.

“வீட்டில் இருக்கும்போது அம்மா கையால் சமைத்துச் சாப்பிட்டால்தான் மனநிறைவு கிடைக்கும். அதேபோல் பிடித்தமான வாசனைத் திரவியங்களை, அவை எவ்வளவு விலை உயர்ந்தவையாக இருந்தாலும் தயங்காமல் வாங்கிவிடுவேன்,” என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

சமந்தா

சமந்தாவைப்பற்றி புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை என்று கூறும் அளவுக்கு, அவரைப்பற்றி நாள்தோறும் ஏதாவது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அனைவருக்கும் அவர் ஓர் உடற்பயிற்சி பிரியை என்பது நன்றாகத் தெரியும். கீர்த்தி சுரேஷைப் போலவே இவருக்கும் வாசனைத் திரவியங்கள் மீது தனி ஈர்ப்பு உண்டாம். படப்பிடிப்பு இடைவேளை தொடங்கி இரவு உறக்கத்துக்கு முன்பு வரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது புத்தகம் படிப்பது சமந்தாவின் வழக்கம்.

“நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. அவருடைய படங்கள் வெளியாகும்போது முதல்நாள், முதல் காட்சியை எப்படியாவது பார்த்துவிடுவேன். ரஜினிக்கு இணையாக இன்னொரு விஷயம் பிடிக்கும் என்றால், அது நம்ம ஊர் இட்லி, சாம்பார்தான். வாய்ப்பு கிடைத்தால் சீன உணவு வகைகளையும் ஒருகை பார்த்துவிடுவேன்,” என்கிறார் சமந்தா.

நயன்தாரா

நயன்தாராவைப் பொறுத்தவரை அவரது தனிப்பட்ட விருப்பங்கள் வித்தியாசமானவை. படப்பிடிப்பு பரபரப்பு இல்லாத நாள்களில் தனது குடும்பத்தாருடன் பொழுதைச் செலவிடுவதில்தான் தனக்கு விருப்பம் அதிகம் என்கிறார்.

குறிப்பாக, கேரளாவில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிடுவாராம். பெரும்பாலும் வீட்டில் தயாரிக்கப்படும் உணவைத்தான் விரும்பிச் சாப்பிடுகிறார். தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து பயணம் செய்வதும் இவருக்குப் பிடித்தமானது.

“சிறு வயது முதலே புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. விதவிதமான புகைப்படங்கள் எடுத்து அவற்றை ஆல்பமாகத் தயாரித்து வைத்துள்ளேன். இரு குழந்தைகளுக்குத் தாயான பிறகு, அவர்களைக் கவனித்துக்கொள்ளத்தான் நேரம் சரியாக இருக்கிறது. அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் நானே செய்ய விரும்புகிறேன்,” என்று தாய்மை உணர்வுடன் கூறுகிறார் நயன்தாரா.

குறிப்புச் சொற்கள்