விளம்பரமா? அபராதமா?: திரையுலகில் புதிய அதிரடி

விளம்பரமா? அபராதமா?: திரையுலகில் புதிய அதிரடி

1 of 5
படம்: விகடன்
படம்: தி நியூஸ் மினட்
படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
படம்: ஃபிலிம்ஃபேர்
படம்: சமயம் மலையாளம்

14 Mar 2026 - 2:58 pm

4 mins read

ஒரு திரைப்படத்தை தயாரிப்பது பெரிய வேலையல்ல. அதை விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் அதைவிட ஆகப் பெரிய வேலை. இதுதான் இன்றைய இந்தியத் திரையுலகின் நிலை.

அங்கு ஒரு படத்தை விளம்பரப்படுத்த தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது.

ஓடிடி தளங்களில் வாரந்தோறும் ஆறேழு படங்கள் வெளியாகின்றன. தமிழ்ப் படங்கள், பிறமொழிப் படங்கள் என்று மேலும் ஒரு டஜன் படங்களாவது வெளியாவது வழக்கமாக உள்ளது. இதில் எது நல்ல படம் எனத் தீர்மானிப்பதற்குள் அடுத்த வாரம் வந்துவிடும். எனவேதான் ஒரு படத்தை விளம்பரம் செய்வது அதன் வெற்றிக்கு அவசியமானதாக உள்ளது.

முன்னணி கதாநாயகர்களும்கூட தங்களது படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் தயக்கமின்றி பங்கேற்கத் தொடங்கியுள்ளனர்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நல்ல விஷயங்கள் அனைத்துக்கும் தொடக்கமாக இருப்பது கேரளத் திரையுலகம்தான். அங்கு அண்மையில் நடந்த ஒரு விவகாரம் தற்போது இந்திய அளவில் பேசப்படுகிறது.

அங்கு பட விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்காத நடிகரான பிஜு மேனனுக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது தயாரிப்புத்தரப்பு. அவர் தமிழிலும் ‘தம்பி’, ‘மதராஸி’ படத்தில் நடித்திருப்பவர்.

கடந்த 2024ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘நடன சம்பவம்’. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்வுகளுக்காக தயாரிப்பாளரும் இயக்குநரும் அழைத்தபோது பிஜு ஒத்துழைக்கவில்லையாம். இதனால் தயாரிப்பாளருக்கு ரூ.25 லட்சம் இழப்பு ஏற்பட்டதாம்.

இதையடுத்து, பிஜு மேனனிடம் நஷ்ட ஈடு கேட்டு கேரள திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊழியர்கள் கூட்டமைப்பிடம் புகார் அளித்துள்ளார் தயாரிப்பாளர். அதை விசாரித்த சங்கம், நடிகர் பிஜு மேனனுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இந்த முடிவு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகத்தையும் வியப்படைய வைத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கேரளாவில் இதுபோன்ற விவகாரங்களை முறையாகவும் கண்டிப்பாகவும் விசாரிக்கிறார்கள் என்கிறார்.

அதேசமயம், கேரளாவைப் போல் கோடம்பாக்கத்தில் கண்டிப்பான அணுகுமுறை இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கேரளாவைப் போல் தமிழ்த் திரைப்படங்களின் விளம்பர நிகழ்வுகளிலும் கதாநாயகர்கள், நாயகிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறை கோடம்பாக்கத்திலும் வரவேண்டும் என்கிறார் சுரேஷ் காமாட்சி.

“நல்ல படைப்பாக இருந்தாலும், அதற்குத் தகுந்த விளம்பரங்கள் அவசியமாகிவிட்டது. அதிலும், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அந்த விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்பதும் மிக முக்கியம்,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“வாரந்தோறும் பல்வேறு படங்கள் வெளியாகின்றன. அவற்றில் நம்முடைய படத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற கடமையை உணர்ந்து நடிகர்கள் செயல்பட வேண்டும்,” என்கிறார் சுரேஷ் காமாட்சி.

நடிகர் அஜித் தனது படங்களின் விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்துள்ளார். ஆனால், தற்போது கார் பந்தயத்தில் பங்கேற்கும் அணியை உருவாக்கிய பிறகு, அதிக பணம் தேவைப்படுவதால் அவர் விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

தனது தனிப்பட்ட தேவைக்காகவும் விருப்பங்களுக்காகவும் விளம்பரங்களில் நடிப்பவர், ஏன் தயாரிப்பாளர் நலன் கருதி படத்தின் விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல் நடிகை நயன்தாராவும் தனது பட விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்தார். ஆனால், அண்மைய தோல்விகளும் திரையுலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் அவரது போக்கிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, படப்பிடிப்புக்காக பல இடங்களுக்குப் பயணம் செய்து எவ்வளவு வேண்டுமானாலும் சிரமப்படத் தயார், ஆனால் பட விளம்பரங்கள் என்ற பெயரில் கல்லூரிகள், வணிக வளாகங்கள் (ஷாப்பிங் மால்கள்) என அலைக்கழிப்பது சரியா என்று கேள்வி எழுப்புகிறார் நடிகை பாவனா.

“இங்கே கலைஞர்களின் வயதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லாராலும் எல்லா இடங்களுக்கும் அலைய முடியாது. கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது கலைஞர்களுக்கு உரிய பாதுகாப்பு அவசியம். இதையெல்லாம் யோசித்துத்தான் பெரும்பாலான நடிகர், நடிகைகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்க்கிறார்கள்,” என்று பாவனா கூறியுள்ளார்.

ஒரு நல்ல படத்தை எடுத்த பின்னர் அதை விளம்பரப்படுத்தாமல் இருப்பது சரியல்ல என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

அண்மையில் ‘மை லார்ட்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சசிகுமார் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். அவர் சொன்னது நியாயமான கருத்து.

“ஒரு படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்றால், அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது என் கடமை,” என்றார் சசி. அதுதான் உண்மை.

“முன்பிருந்த நிலைமை வேறு. இப்போதுள்ள சூழல் வேறு. முன்பு மக்களுக்கு சினிமாவைத் தவிர வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கிடையாது. ஆனால், இப்போது அப்படியல்ல. ஏகப்பட்ட பொழுதுபோக்குகள் உள்ளன. இந்தச் சூழலில் மக்களைப் படம் பார்க்க வைப்பதே பெரிய வேலை,” என்று கூறியுள்ளார் தனஞ்செயன்.

சரி, சர்ச்சைக்குப் பிள்ளையார் சுழி போட்ட பிஜு மேனன் என்ன சொல்கிறார்?

சில விஷயங்களை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது என்றும் அதைச் செய்யாமல் கலைஞர்களைக் குறை சொல்வது சரியல்ல என்றும் கூறியுள்ளார் பிஜு மேனன்.

“ஒரு படத்துக்கான விளம்பர நிகழ்வில் ஏற்கெனவே ஏழு பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். எட்டாவதாக நான் வந்து என்ன பேசப் போகிறேன்,” என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிஜு மேனன்.

இதற்கு ஒருதரப்பினரின் ஆதரவு கிடைத்துள்ளது.

“தொகுப்பாளரும் யாரேனும் இரண்டு பேரிடம்தான் கேள்விகளைக் கேட்பார். மற்றவர்கள் சும்மா இருக்க வேண்டும். இதைத் தவிர்க்க வேண்டும் எனில், அனைவரையும் பேச வைக்க வேண்டும் என்பதுதான் பிஜு மேனன் தரப்பின் கருத்து. இதுவும் சரிதானே,” என்று அத்தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள்.

எனினும், தமிழ், கேரள திரையுலகங்களுக்கு இடையே சில முக்கியமான வித்தியாசங்கள் இருப்பதை மற்றொரு தரப்பு சுட்டிக்காட்டுகிறது.

சம்பளம், படத்தின் மொத்த பட்ஜெட், படப்பிடிப்பு நடக்கும் நாள்கள் என பல அம்சங்களில் மலையாளப் படங்களைவிட தமிழ்ப் படங்களுக்கு பலமடங்கு அதிக தொகை செலவிடப்படுகிறது.

“அது மட்டுமல்ல, கோடம்பாக்கத்தில் நடிகர்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி உள்ளது. இங்கு இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இரண்டாம் பட்சம்தான். எனவே, நடிகருக்கு அபராதம் விதிப்பதெல்லாம் சாத்தியம் இல்லை,” என்றும் விவரமறிந்த சிலர் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
நயன்தாராநடிகைநடிகர்மலையாளம்இந்திதிரைப்படம்இயக்குநர்விளம்பரம்தயாரிப்புகுற்றச்சாட்டுஅபராதம்திரைப்படத்துறை