திரைத்துறையில் தான் எதிர்கொண்ட சவால்கள், சில நடிகர்களின் மனநிலை குறித்து முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ள கருத்துகள் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளன.
‘நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி’ தளத்தில் வெளியாகவுள்ள ‘அக்கா’ இணையத் தொடருக்கான விளம்பர நேர்காணலில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய கீர்த்தி சுரேஷ், படப்பிடிப்புத் தளங்களில் தான் சந்தித்த சில கசப்பான அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.
“லட்சியமும் திறமையும் கொண்ட பெண்களைப் பார்க்கும்போது சிலருக்கு ஏன் இந்த ‘பாதுகாப்பற்ற உணர்வு’ வருகிறது எனத் தெரியவில்லை. என் திரைப்பயணத்தில் அப்படிப்பட்ட சில நடிகர்களுடன் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
“தொடக்கத்தில் என்னிடம்தான் ஏதோ தவறு இருக்கிறதோ என்று என்னையே நான் சந்தேகப்பட்டேன். ஆனால், பிறகுதான் அது அவர்களின் சொந்த பயம், பாதுகாப்பற்ற உணர்வு எனப் புரிந்தது. லட்சியத்துடன் வாழும் பெண்களைக் கண்டால் சிலருக்குப் பயம் வந்துவிடுகிறது,” என்றார் கீர்த்தி சுரேஷ்.
