தமிழ், தெலுங்குத் திரையுலகில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
காதல் கணவர் நடிகர் நாக சைதன்யாவைப் பிரிந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டார்.
அதனால், படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவந்த சமந்தாவை அவரது தந்தையின் மரணம் வெகுவாகப் பாதித்தது.
கடந்த ஈராண்டுகளாகத் திரையுலகில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் இருந்த அவர், சில படங்கள், இணையத் தொடர்கள் ஆகியவற்றில் மட்டும் நடித்தார்.
ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்குக் குடியேறி அங்கு வசித்து வரும் அவர், ‘ட்ராலாலா மூவிஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்களைத் தயாரித்தார்.
இந்நிலையில், ஈராண்டுகள் கழித்து தெலுங்குத் திரையுலகில் மீண்டும் நாயகியாக நடிக்கவுள்ளார் சமந்தா.
‘ஓ பேபி’ என்ற வெற்றி படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்கத்தில் புதிதாக உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
சமந்தா தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ஃபேமிலி மேன் சீசன் 2, சிட்டாடெல்; ஹனி பனி ஆகிய தொடர்கள் வெளியான நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்திற்காக ‘ரக்த் பிரமந்த்’ என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.