அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் அவரது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி வருகிறது.
தனது இயக்கதில் உருவாகியுள்ள அந்தப் படம் குறித்துப் பேட்டி அளித்துள்ள இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித் கொடுத்த இந்த நல்வாய்ப்பை மனதில் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக படத்தை இயக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இனி அவர் கூறுவதைக் கேட்போம்.
“அஜித், மகிழ் திருமேனி என்ற கூட்டணியை யாருமே எதிர்பார்க்கவில்லை. அவரது படத்தை இயக்க வேண்டும் என்பது 15 வருடக் கனவு.
“திடீரென ஒரு நாள் அவரது மேலாளர் தொடர்புகொண்டு பேசினார். அஜித் சாரின் இந்தப் படத்தை நீங்கள்தான் இயக்குகிறீர்கள் என்றார். பிறகு அஜித்தும் தொடர்புகொண்டு பேசினார்.
“அதன் பின்னர் தயாரிப்பாளர் சுபாஷ் கரனைப் பார்க்க இருவரும் லண்டன் பறந்தோம். அப்போதுதான் அஜித்தை முதன்முறையாக நேரில் சந்தித்தேன். ஆனால், நீண்ட நாள் பழகியது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் வெகு இயல்பாகப் பேசினார் அஜித்.
“படத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. முதன்முறையாக வேறு ஒருவர் எழுதிய கதையை இயக்கி இருக்கிறேன். ஆனால், திரைக்கதையில் என் பங்களிப்பு உண்டு.
“பொதுவாக என்னை அனைவருமே ஆக்ஷன் இயக்குநராகத்தான் பார்க்கிறார்கள். எனவே, அஜித் என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வி எனக்குள் எழுந்த நிலையில், இதுகுறித்து நான் கேள்வி கேட்கும் முன்பே அஜித்தே விளக்கம் அளித்தார். ‘மகிழ், நமக்கு வசதியான சூழலில் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பாக இந்தப் படத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றார். எனவே, வழக்கமான பாணியை அவர் விரும்பவில்லை என்பது புரிந்தது.
“ஒரு சாதாரண மனிதன், தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள சிறிய உலகத்தையும் காப்பாற்ற மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகள் பிரம்ம பிரயத்தனம்தான் இந்தப் படத்தின் அடித்தளம்.
“அந்த மனிதனின் விடாமுயற்சிக்கு எதிராக எல்லாரும் திரண்டு இருக்கும் போதுகூட அவன் சோர்வடையாமல் தன் சிறிய உலகத்தை எப்படி காப்பாற்றப் போகிறான் என்பதுதான் படக்காட்சிகளாக திரையில் விரியப்போகிறது.
“அஜித்தைப் பொறுத்தவரை நம் சமூகத்தின் போக்குகளை மிக நுட்பமாகக் கவனிக்கக் கூடியவர். ஆணாதிக்கம், பெண்களுக்கு எதிரான மனப்போக்கு, பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றில் உடன்பாடு இல்லாதவர்.
“எனவே, பெண்கள் கண்ணோட்டத்தில் இருந்து சில விஷயங்களை சமூகத்துக்குச் சொல்ல வேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்கு உள்ளது.
“பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் படமாக ‘விடாமுயற்சி’ இருக்கும்,” என்கிறார் மகிழ் திருமேனி.
அதிரடி சண்டைகள், சாகசங்கள், ரகசியங்கள் நிறைந்த படமாக இருந்தாலும், கதைக்குத் தேவையான சண்டைக்காட்சிகள் இருக்குமாம்.
மேலும், இது ஒரு அதிரடிப் படமல்ல என்றும் இயக்குநர் இப்போதே தெளிவுபடுத்துகிறார்.
காதல் காட்சிகளுக்கான இடம் குறைவாகவே இருந்தாலும் அதை முழுமையாகவும் நிறைவாகவும் பயன்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்.
“மிக துள்ளலான, சுறுசுறுப்பான, அழகான அஜித்தை திரையில் பார்க்க முடியும். உறவுகள், உறவு சிக்கல்களின் கண்ணோட்டத்திலும் கதை நகரும். ஒரு வகையில் பெண்களுக்குப் பிடித்தமான படமாக இருக்கும் என்றும் வகைப்படுத்த முடியும்.
“இப்படிப்பட்ட படங்கள் ஆராதிக்கப்பட்டால் ஆரோக்கியமான பாதைக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்,” என்று சொல்லும் மகிழ் திருமேனி, அஜித்துக்கு இணையாக நடிகர் அர்ஜுனின் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
இருவரும் இணைந்து நடித்த ‘மங்காத்தா’ படத்தின் வெற்றி அனைவரும் அறிந்ததுதான் என்றும் அர்ஜுன் இணைவதால் இரு படங்கள் குறித்த ஒப்பீடுகள் நடக்கும் என்பது தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இரு படங்களுக்குமான கதைக்களம், கதாபாத்திரங்களின் தன்மை என அனைத்துமே முற்றிலும் வெவ்வேறானவை. எனவே, இந்தப் புதிய படைப்பை ‘விடாமுயற்சி’யாகவே பாருங்கள்.
“அர்ஜுனுக்கும் இதில் நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது. தன் சொந்த படத் தயாரிப்பில் பரபரப்பாக இருந்த அவரிடம் நடிக்க கேட்டபோது அந்த வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு எங்களுடன் இணைந்தார்.
“அவரது கதாபாத்திரத்தில் இருந்து இந்த படத்துக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதைக் கச்சிதமாகத் தந்துள்ளார். அதுமட்டுமல்ல, அஜித்திடம் உங்கள் கதாபாத்திரத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என கேட்டபோது அவர் சொன்ன பதில் அர்ஜுன். அந்த அளவுக்கு அவருக்கும் அர்ஜுனுக்கும் இடையே ஒர அலைவரிசை இருந்தது.
“அதேபோல் அஜித்துக்கு இணையாக ஒரு கதாநாயகி வேண்டுமென்று யோசித்தபோது மிக இயல்பான தேர்வாக திரிஷா இருந்தார். அவர் கதை கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். ஏற்கெனவே ‘கிரீடம்’ படம் தொடங்கி பல படத்தில் இருவரும் நடித்துள்ளனர்.
“இருவருக்கும் இடையே இயல்பான நட்பு இருந்ததால் காட்சிகளும் இயல்பாக அமைந்துவிட்டன. அந்தக் காட்சிகளுக்கு கூடுதல் அழகு சேர்ந்ததும் உண்மை.
“மற்றொரு நாயகியாக ரெஜினா நடித்துள்ளார். முழுப் படத்தையும் பார்த்த பிறகு, ரெஜினாவுக்குத்தான் இந்தப் படத்தால் அதிக நன்மைகள் கிடைக்கும், அவருக்கு பெரிய பெயர் கிடைக்கும்’ என்றார்.
“அது உண்மைதான். இந்த அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது,” என்கிறார் மகிழ் திருமேனி.
அஜித்தைப் பொறுத்தவரை எதையும் அர்ப்பணிப்புடன் செய்வார். எதிலும் முழு மனதுடன் இயங்குவதால்தான் அவருக்கு வெற்றி சாத்தியமாகிறது.
“சினிமா, கார் பந்தயப் போட்டி, புகைப்படம் எடுத்தல், துப்பாக்கி சுடுதல் என்று அனைத்திலும் அவர் காட்டும் அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது,” என்று பாராட்டுகிறார் மகிழ் திருமேனி.

