தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என்னைத் திரையில் பார்த்தபோது அம்மா அழுதுவிட்டார்: ஆகாஷ்

3 mins read
b1b7f369-2045-4191-8ed9-e3a03712effb
ஆகாஷ் முரளி. - படம்: ஊடகம்

“என்னையும் அண்ணன் அதர்வாவையும் எப்படியாவது திரையுலகுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். அது இப்போது நிறைவேறியுள்ளது.

“என்னை முதன்முறையாக திரையில் பார்த்தபோது அம்மா அழுதுவிட்டார்,” என்று உடைந்த குரலில் பேசுகிறார் ஆகாஷ் முரளி.

உங்கள் யூகம் சரிதான்..! காலஞ்சென்ற நடிகர் முரளியின் இளைய மகன், நடிகர் அதர்வாவின் இளைய சகோதரர்தான் ஆகாஷ்.

இவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நேசிப்பாயா’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகி உள்ளார்.

காதல், அடிதடி, நகைச்சுவை என முதல் படத்திலேயே அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகப் படக்குழுவினர் ஆகாஷைப் பாராட்டுகிறார்கள்.

“சிறு வயது முதல் அப்பாவையும் அவர் நடித்த படங்களையும் பார்த்து வளர்ந்தவன் என்பதால் இயல்பாகவே எனக்கும் சினிமா மீதான ஆர்வம் ஏற்பட்டது.

“அப்பாவைப் போல் நானும் ஒரு கதாநாயகனாக உருவாக வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் பட்டப்படிப்பை முடிக்காமல் திரைத்துறை பக்கம் எட்டிக்கூடப் பார்க்கக்கூடாது என அப்பா கண்டிப்புடன் கூறிவிட்டார். அதனால் அவர் சொன்னதுபோல் கல்லூரிப் படிப்பை முடித்தேன்.

“இதற்கிடையே, எனது சகோதரர் அதர்வாவும் சினிமாவில் அறிமுகமானார். அவருடன் சில படங்களின் படப்பிடிப்புகளுக்குப் போயிருக்கிறேன். எனக்கு அப்பா, அண்ணன் ஆகிய இருவரும்தான் முன்மாதிரி,” என்கிறார் ஆகாஷ்.

தொழில் மேலாண்மைத் துறையில் பட்டப்படிப்பை முடித்த பிறகு நடிப்புப் பள்ளிக்குச் சென்று பயிற்சி பெற்றுள்ள இவர், திரைப்பட வாய்ப்புக்கான முயற்சிகளைத் தொடங்கியபோதுதான் கொரோனா முடக்க நிலையால் தானும் முடங்க நேரிட்டதாம்.

அச்சமயம் இயக்குநர் விஷ்ணுவர்தன் ‘ஷேர்ஷா’ பட வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்க, ஆகாஷ் நேரில் சென்று சந்தித்துள்ளார். இருவரும் விரிவாகப் பேசியுள்ளனர்.

அதன்பின்னர் ஒருமாதம் கடந்துவிட்ட நிலையில், திடீரென ஒருநாள் தொடர்பு கொண்டு, ‘நானே உன்னை அறிமுகப்படுத்துகிறேன் ஆகாஷ்’ எனக் கூறினாராம்.

‘‘என்னதான் சிறு வயது முதல் சினிமா ஆசை இருந்தாலும், எப்போது திரையில் தோன்றப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும், ‘நேசிப்பாயா’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்குக் கிளம்புவதற்கு முன்பு மிகவும் பதற்றமாக உணர்ந்தேன். அம்மா, அண்ணனிடம் பேசிய பிறகே கிளம்பினேன்.

“இருவரின் வாழ்த்துகளுடனும் அப்பாவின் ஆசீர்வாதத்துடனும் புறப்பட்டபோது தெம்பாக இருந்தது. அப்பா நிறைய சாதித்துள்ளார். அண்ணனும் கடுமையாக உழைக்கிறார். இருவருடைய பெயரையும் கெடுத்துவிடக் கூடாது என்ற பயம்தான் பதற்றத்துக்கு முக்கிய காரணம். நானும் முடிந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்,” என்கிறார் ஆகாஷ்.

இயக்குநர் விஷ்ணுவர்தன் தம்மிடம் இரண்டு கதைகளைச் சொல்லி, ஏதாவது ஒரு கதையைத் தேர்வு செய்யும்படி கூறியதாகவும் இரண்டுமே அருமையான கதைகளாக இருந்ததாகவும் சொல்கிறார்.

‘நேசிப்பாயா’ காதல், சண்டைகள் நிறைந்த கதையாக உருவாகி இருக்கிறது. கதைப்படி ஆகாஷின் பெயர் அர்ஜுன். நிஜ வாழ்க்கையில் இவர் எப்படியோ அதற்கு முற்றிலும் நேர்மாறான கதாபாத்திரமாம்.

“நான் இயல்பில் மிகவும் அமைதியானவன். ஆனால், அர்ஜுன் அப்படியல்ல. துறுதுறு, பரபர என்று வலம் வருபவன். அவ்வாறு நடிப்பது சவாலாக இருந்தது.

“மும்பை நடிப்புப் பள்ளியில் ஒருமாதம் நடந்த பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றது பெரும் உதவியாக இருந்தது. என் வாழ்க்கையில் இதுவரை வெளிப்படுத்தாத பல முகபாவங்களை, உணர்வுகளை இப்படத்தில் வெளிப்படுத்தி உள்ளேன்.

“திரையில் என்னைப் பார்த்தபோது, எனக்கே வியப்பாக இருந்தது. இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். என் மீதான எனது நம்பிக்கை அதிகமாகிவிட்டது,” என்கிறார் ஆகாஷ் முரளி.

குறிப்புச் சொற்கள்