இந்தியத் திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகி நிற்கப்போவதாக அறிவித்துள்ளார்.
84 வயதாகும் அமிதாப் பச்சன், சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். நாள்தோறும் தனது எண்ணங்களையும் அனுபவங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டவர் அவர்.
இந்நிலையில், அவரது இந்தத் திடீர் அறிவிப்பு கோடிக்கணக்கான ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் இது குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ள அமிதாப், ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
“என்னை மன்னியுங்கள். சில நாள்கள் முழுமையாக ஓய்வெடுத்து உடல்நலனைத் தேற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளேன். அதனால் தற்போது என்னால் எந்தப் பதிவுகளையும் எழுத இயலவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார் அமிதாப்.
தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து அவர் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசனுடன் இணைந்து ‘கல்கி 2898 ஏடி 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், சோனி தொலைக்காட்சியின் ‘கோன் பனேகா கரோர்பதி’ நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
