இரவு பகலாக வேலை பார்க்கும் அனிருத்: வினோத் பாராட்டு

1 mins read
4a481c28-f93e-4353-abb8-1bba35bdcb7e
அனிருத். - படம்: இந்தியா டுடே

‘ஜனநாயகன்’ படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டாடக் காத்திருந்தனர் அனிருத் ரசிகர்கள்.

இன்றைய தேதியில் தென்னிந்தியாவின் ‘நம்பர்-1’ இசையமைப்பாளர் அனிருத்தான் என்பது எல்லாரும் எற்றுக்கொள்ளும் செய்தியாக உள்ளது. இவரது இசையில் அடுத்து ‘எல்ஐகே’ வெளியாக உள்ளது. இது பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள படம்.

அனிருத் வெறித்தனமாக, இரவு பகல் பாராமல் வேலை பார்ப்பதாகச் சொல்கிறார் ‘ஜனநாயகன்’ இயக்குநர் ஹெச் வினோத்.

இந்தியில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘கிங்’ படத்துக்கும் அனிருத்தான் இசையமைக்கிறார்.

தெலுங்கில் மார்ச் மாதம் வெளியாகும் ‘தி பரடைஸ்’ படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் அனிருத் இசையில் அற்புதமாக உருவாகி உள்ளதாகப் படத்தின் நாயகன் நானி தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜுக்குப் பிடித்தமான இசையமைப்பாளர் அனிருத்தான். அவர் நாயகனாக நடிக்கும் ‘டிசி’ படத்துக்கு இசையமைத்து வரும் அனி, லோகேஷ் அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் ‘ஏஏ-23’ படத்துக்கும் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனிடையே, ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து, பிப்ரவரியில் பின்னணி இசைப் பணிகளை தொடங்க உள்ளார். மேலும் கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினி நாயகனாக நடிக்கும் ‘தலைவர் 173’ படத்திலும் அனிருத்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ‘அரசன்’ படத்தின் மூலம் வெற்றிமாறனுடன் முதன்முறையாக கைகோத்துள்ள அனிருத் நடிகர் அஜித்தின் அடுத்த படத்துக்கும் இசையமைப்பார் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்