பணத்துக்காக ‘ஜனநாயகன்’ படத்தைத் திருடிய உதவி படத் தொகுப்பாளர் வாக்குமூலம்

பணத்துக்காக ‘ஜனநாயகன்’ படத்தைத் திருடிய உதவி படத் தொகுப்பாளர் வாக்குமூலம்

படம்: ஐஎம்டிபி

25 Apr 2026 - 4:32 pm

1 mins read

பெரும் தொகைக்கு ஆசைப்பட்டு ‘ஜனநாயகன்’ படத்தை இணையத்தில் வெளியிட்டதாக அப்படத்தின் உதவி படத்தொகுப்பாளர் பிரசாத் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான கடைசிப் படம் ‘ஜனநாயகன்’ எனக் கருதப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியானது. எனினும், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் நிலவிய சிக்கல் காரணமாக பட வெளியீடு தள்ளிப்போனது.

படம் நிச்சயம் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், யாரும் எதிர்பாரா விதமாக ‘ஜனநாயகன்’ படத்தை சிலர் இணையத்தில் வெளியிட்டனர்.

இது தொடர்பாக தமிழக இணையக் குற்றப் பிரிவுக் காவல்துறையினர், உதவிப் படத்தொகுப்பாளர் பிரசாத் உட்பட ஒன்பது பேரைக் கைது செய்தனர்.

இந்நிலையில், தன் சகோதரியின் நண்பரும் கணினிப் பொறியாளருமான ஒருவருடன் இணைந்து பணியாற்றியபோது, குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக முடியும் என்று ஆசை காட்டியதாக பிரசாத் வாக்குமூலம் அளித்துள்ளார்.

“அந்த நண்பரின் தூண்டுதல் காரணமாக, ‘ஜனநாயகன்’ படக் காட்சிகளைத் திருடி, வீட்டுக்கு எடுத்துச் சென்று படத்தொகுப்பை முடித்து இணையத்தளத்தில் வெளியிட்டோம்,” என்று பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ‘ஜனநாயகன்’ படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் என்பவர் தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இவர் சங்க உறுப்பினர் அல்லாதவர்களை தன் உதவியாளர்களாகப் பயன்படுத்தியதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியானதில் இவருக்கு நேரடித் தொடர்பில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
விஜய்ஜனநாயகன்திரைப்படம்