அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’. யோகி பாபு கதை நாயகனாக நடிக்கிறார்.
படத்தின் கதையை அவரிடம் சொல்வதற்கான வாய்ப்பு அமைந்தபோது, ‘உங்களுடைய வழக்கமான சேட்டைகளும் ‘பஞ்ச்’ வசனங்களும் தேவைப்படாது’ என்பதைத்தான் முதலில் குறிப்பிட்டதாகச் சொல்கிறார் ராஜ்மோகன்.
ஆனால், முழுக் கதையையும் கேட்ட யோகி பாபு, உணர்ச்சிவசப்பட்ட நிலையில், ‘இது வாழ்வியல் கதையாக உள்ளது. அனைவருக்கும் சொல்லப்பட வேண்டிய அருமையான கதை’ என்றாராம்.
அப்படி என்ன கதை அது?
“பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலைப் பின்னணியாகக் கொண்டு இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் இருசக்கர வாகனம், கார் என ஏராளமான, தனிப்பட்ட, தொழில் நிமித்தமான பணிகளுக்காக வாங்கப்படுகின்றன.
“ஓட்டுநராக இருந்த என் தந்தை கடுமையாக உழைத்து ஒரு வண்டிக்கு உரிமையாளரானார். பின்னர் அவர் பல வாகனங்களைப் பயன்படுத்தியதால் சிறு வயது முதலே மோட்டார் வாகனங்கள் மீது எனக்கு ஒரு காதல் இருந்தது.
“நானும் ஓட்டுநராக விரும்பினேன். ஆனால், இன்று திரைப்பட இயக்குநரான பிறகு நான் ஆசைப்பட்ட ஒரு விஷயம் குறித்தே படம் எடுப்பது சரியாய் இருக்கும் எனத் தோன்றியது. பழைய வாகனங்களை (மறுவிற்பனை) வாங்க விரும்புவோர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இது இருக்கும். இவ்வாறு சொல்ல என்ன காரணம் என்பது படம் பார்க்கும்போது புரியும்,” என்கிறார் ராஜ்மோகன்.
சென்னைதான் இப்படத்தின் கதைக்களமாம். வழக்கமான யோகி பாபு படமாக இருக்காது என்றும் அழகான காதலையும் அடித்தட்டு மக்களின் உணர்ச்சிபூர்வமான வாழ்வியலையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக அலசியிருப்பதாக இயக்குநர் தரப்பு சொல்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“யோகி அண்ணாவை எனக்கு நீண்ட நாள்களாகத் தெரியும். அவரைவிட கதைக்கு ஏற்ற வேறு நாயகன் கிடைப்பது சிரமம். யோகி பாபு மனைவியாக அனாமிகா மகி நடித்துள்ளார். இது அவருக்கு அறிமுகப் படம்.
“மேலும், காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, ‘அயலி’ மதன், சுப்ரமணியம் சிவா, ‘மைனா’ நந்தினி, சென்றாயன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்,” என்று கூறியுள்ளார் இயக்குநர் ராஜ்மோகன்.