ஆண்டுகள் கடந்தாலும் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட்டுள்ள ‘பாட்ஷா’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்துக் கொண்டாடி வருகின்றனர்.
30 ஆண்டுகள் முடிந்தும் ரசிகர்களைப் பரவசப்படுத்தும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தைப் பெரியதிரையில் பார்க்கப் பெருங்கூட்டமாய் வரும் கூட்டம் ‘‘ஒரேயொரு தலைவர், ஒரேயொரு பாட்ஷா மட்டுமே,’’ என்று திரையரங்குகளை அதிர வைக்கின்றனர்.
1995ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ‘பாட்ஷா’ திரைப்படம் அன்றிலிருந்து இன்றுவரை பலருக்கும் பிடித்த திரைப்படமாகத் திகழ்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் பேரளவில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற இத்திரைப்படம் மறுவெளியீட்டில் வெற்றிபெறுமா என்ற எண்ணம் ஏற்பட்டது.
இந்நிலையில், தங்கள் தலைவராகக் கருதும் ரஜினியின் படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிகளவிலான ஆதரவை ரஜினி ரசிகர்கள் வாரி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அவரது சமூக ஊடகப் பக்கத்தில் பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
“‘புகழ்பெற்ற படம் ஒன்று வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு செய்தததைக் கொண்டாட வேண்டிய நேரமிது.
“ ‘பாட்ஷா’ படத்தின் பிரம்மண்ட வெற்றிக்கு நன்றி. இதுவரை இல்லாத வகையில் ‘4கே டால்பி அட்மாஸ்‘ எனும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த மாயவித்தையை பெரியத் திரையில் காணத் தவறாதீர்கள்,’’ என மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

