தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்பானவன், கோபமானவன் இந்த ‘வீர தீர சூரன்’

3 mins read
18db2824-b1cc-487f-8500-aa3037e220f3
விக்ரம். - படம்: ஊடகம்

விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ளது ‘வீர தீர சூரன்’ திரைப்படம். அருண் குமார் இயக்கியுள்ளார். ஒட்டி வெட்டப்பட்ட தலைமுடி, பெரிய தாடி, வேட்டி சட்டை, மளிகைக் கடை பணியாளர், கையில் துப்பாக்கி எனத் தலைப்புக்கு ஏற்ப திரையில் அதிரடியாக வலம் வருகிறாராம் விக்ரம்.

“கதைப்படி, காளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்த காளி மிகவும் அன்பானவன். குடும்பம்தான் எல்லாம் என்று நினைப்பவன். கோபக்காரன், சண்டையும் போடத் தெரிந்தவன்.

“நான் படத்தின் கதையை அவரிடம் விரிவாக விவரித்தேன்.

“அதன் பிறகு தாம் இந்தப் படத்தில் ஏற்கும் காளி கதாபாத்திரமாக உருமாறி விக்ரம் என் முன்னால் வந்து நின்றபோது வியந்தேன்,” என்கிறார் அருண் குமார். இவர், இதற்கு முன்பு ‘சேதுபதி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சித்தா’ ஆகிய படங்களை இயக்கிய அனுபவமுள்ளவர்.

இப்படத்தின் விளம்பர சுவரொட்டிகளில் ‘வீர தீர சூரன்’ பாகம் 2 என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கான காரணம் என்ன?

“இது அதிரடியான திகில் கதையாகும். படத்தில் நம் வாழ்வியலுடன் தொடர்புடைய அம்சங்கள் இருக்கும். ஓர் இரவில் நடக்கும் முரண்பாடான விஷயங்கள் குறித்து இப்படம் அலசும்.

“சில கதாபாத்திரங்கள் சந்திக்கும் ஓர் இரவைப்பற்றி பேசுகிறது ‘வீர தீர சூரன்’ படத்தின் இரண்டாம் பாகம். அதற்கு முன்பே நடந்த பல கதைகளும் உள்ளன.

“விக்ரம் கிட்டத்தட்ட ஒரு நூலகம் போன்றவர். அவருடன் இருக்கும் ஒவ்வொரு கனமும் ஏதாவது தெரிந்துகொள்ளலாம். எதையும் 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் அணுகுமுறை கொண்டவர்.

“தொழில்நுட்ப ரீதியில் அனைத்தும் அறிந்தவர். அது கதாபாத்திரத்துக்கான மிக நுணுக்கமான அம்சங்களை கவனித்து அவற்றை நன்கு மெருகேற்றுவார். 30 ஆண்டுகால அனுபவத்துக்குப் பிறகும் தன் முதல் படத்தில் நடிப்பது போன்ற அவரது அணுகுமுறை வியக்க வைக்கிறது.

“அதேபோல் படப்பிடிப்புத் தளத்தை கலகலப்பாக வைத்திருப்பார். என்னை ‘சித்தா’ என்றுதான் அழைப்பார். அவருடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பை வாழ்க்கையின் ஆகச்சிறந்த பரிசாகக் கருதுகிறேன்,” என்கிறார் அருண் குமார்.

படத்தின் நாயகி துஷாராவுக்கும் வில்லன், காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இப்போதே பாராட்டுகள் குவிகின்றன.

வழக்கம்போல் நடிப்பில் வித்தியாசம் காட்டி ஆச்சரியப்படுத்தி உள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.

“யாரை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது முதலில் துஷாராவின் நினைவுதான் வந்தது. திறமையாக நடிக்கக் கூடியவர். இதில் கலைவாணி என்கிற அருமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க வேண்டுமென்றால் சில கதாநாயகிகள் தயங்குவார்கள். ஆனால் துஷாரா இப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடிக்க முன்வந்தார்.

கலைவாணியும் மிக அன்பானவள்தான். காளியும் குழந்தைகளும் தான் நடத்தும் கடையும்தான் அவளது உலகம். அரவணைப்பால் மட்டுமே தன் குடும்பத்தை கட்டி போட்டிருப்பவள்.

துஷாராவின் நடிப்பைத் திரையில் பார்க்கும்போது ரசிகர்கள் வியக்கப் போவது உறுதி.

“எஸ்.ஜே.சூர்யாவிடம் கதை சொல்லும்போது மட்டும் நமக்குள் ஒருவித உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அவர் வெற்றிப் படங்களை கொடுத்த பிறகும்கூட ஒரு நடிகராக அவரது தேடலும், தாகமும் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன.

“அண்மைக்காலமாக காவல்துறை அதிகாரி வேடத்தில் நிறைய நடித்துவிட்டார். எனினும், இதில் வித்தியாசமாக நடித்திருக்கிறார். என்னிடம் மிக அன்பாகப் பேசிப் பழகிய நேர்மையான மனிதர்களில் அவரும் ஒருவர். கதைப்படி அவரது கதாபாத்திரத்தின் பெயர் அருணகிரி. அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்,” என்கிறார் அருண் குமார்.

குறிப்புச் சொற்கள்