விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் வெளி உலகத் தொடர்பின்றி 100 நாள்கள் இருக்க வேண்டும், இடையிடையே நடக்கும் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
வாரா வாரம் வெளியேற்றச் சுற்றுகளும் நடக்கும். மக்கள் மனங்களைக் கவர்ந்த போட்டியாளர் நிகழ்ச்சியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவர்.
விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமல்லாமல் மனரீதியாக நடத்தப்படும் போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றி பெற வேண்டும்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் எட்டு பருவங்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், ஒன்பதாவது பருவம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க உள்ளது.
அன்று நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் தெரியவரும்.
கடந்த ஆண்டு நிகழ்ச்சியை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில், ஒன்பதாவது ஆண்டு நிகழ்ச்சியையும் விஜய்சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார்.
‘பிக் பாஸ் - 9’ நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா, நடனக் கலைஞரும் சமையல் நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமான ஜன்மோனி டோலி, பாக்கியலட்சுமி தொடர் பிரபலம் நேஹா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சின்னத் திரை நடிகர் புவியரசு, நடிகர் உமர், நடிகை பாடினி குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை இந்த முறையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதால், புதிய பருவத்தில் அவரைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.

