விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அதில் சில திரையுலக நட்சத்திரங்கள், சின்னத் திரை நட்சத்திரங்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் எனப் பலரும் கலந்துகொள்வார்கள்.
இந்நிலையில், பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது பருவத்தின் வெற்றியாளராக திவ்யா கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சபரிநாதனுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. ‘விக்கல்ஸ்’ விக்ரம் மூன்றாவது இடத்திலும் அரோரா சின்க்ளேர் நான்காவது இடத்திலும் வெற்றிபெற்றனர்.
100 நாள்களைக் கடந்து ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் விஜே பார்வதி, கம்ருதீன், ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர் உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
கிட்டத்தட்ட 30 நாள்களுக்குப் பிறகு ‘வைல்டு கார்டு’ போட்டியாளர்களாக திவ்யா கணேஷ், அமித் பார்கவ், பிரஜின் சாண்ட்ரா ஆகிய நால்வரும் போட்டியில் களமிறங்கினர்.
இறுதிப் போட்டிக்கான நேரடித் தகுதி ஆட்டத்தில் சாண்ட்ராவிடம் வன்முறையாக நடந்து கொண்ட காரணத்தால் பார்வதி, கம்ருதீன் இருவரும் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இது சமூக ஊடகத்தில் பேசுபொருளாக மாறியது.
தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் ‘வைல்டு கார்டு’ போட்டியாளராக வந்து வெற்றியாளராக அறிவிக்கப்படும் இரண்டாவது நபர் என்ற பெருமையைத் திவ்யா பெற்றுள்ளார்.
இதற்குமுன் ஏழாவது பருவத்தில் அர்ச்சனா என்பவர் ‘வைல்டு கார்டு’ போட்டியாளராக நுழைந்து வெற்றி பெற்றார்.

