ஜல்லிக்கட்டுக்கு இணையானது பாய்மரப் படகுப் போட்டி: சூரி

3 mins read
d2762674-c1a1-4d21-9452-f0298d58990e
‘மண்டாடி' படத்தின் சுவரொட்டி. - படம்: விகடன்
multi-img1 of 2

கதை நாயகனாக இருந்த தம்மை, கதாநாயகனாகக்கூட நடிக்கலாம் என மனத்தில் நம்பிக்கையை விதைத்தது ‘கருடன்’ படம்தான் என்கிறார் சூரி.

அடுத்தடுத்து நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நடித்துவரும் இவரது அடுத்த படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.

பொங்கல் என்றாலே கொண்டாட்டம்தான் என்றும் ஒவ்வொரு ஆண்டும் சொந்த ஊரான ராஜாக்கூர் சென்று அங்குள்ள ஊர் மக்கள், உறவுகளுடன் தானும் சாதாரண மனிதராகப் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம் என்றும் விகடன் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டும் சொந்த ஊரில்தான் பொங்கல் கொண்டாடினார் சூரி. கடந்த ஆண்டு தமக்குச் சிறப்பானதாக அமைந்தது என்றும் சவால்களும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த உலகம் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. என்னைப் பொறுப்பு உள்ளவனாகவும் மாற்றியுள்ளது. என்னை நம்பிய மனிதர்கள், உறவுகளுக்கு நம்பிக்கைக்கு உரியவனாக நடக்க முயற்சி செய்து வருகிறேன்,” என்று சூரி தெரிவித்துள்ளார்.

‘மண்டாடி’ படம் தனக்குப் புது உலகமாக அமைந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆழ் கடலுக்குள் முதன்முதலாக அலைந்து திரிந்த அனுபவத்தை மறக்க இயலாது என்கிறார்.

இது மீனவர்களின் வாழ்வியலையும் அவர்களின் உலகத்தையும் பேசும் கதையுடன் உருவாகும் படமாம். இந்தக் கதை மனத்துக்குள் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என்றும் சூரி கூறியுள்ளார்.

“நம் ஊரில் புயல், வெள்ளம் என இயற்கைச் சீற்றங்கள் எங்கே வந்தாலும் உடனே உதவிக்கு வந்து நிற்பது மீனவ மக்கள். அவர்களால் மட்டும் எப்படித் திறமையாகச் செயல்பட முடிகிறது எனப் பலமுறை வியந்திருக்கிறேன். அவர்களுடன் பழகிய போதுதான் மீனவர்களின் வாழ்க்கைமுறையே அப்படித்தான் இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன்,” என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சூரி.

போருக்குச் செல்லும் ராணுவ வீரர்களின் வாழ்வும் மீன்பிடிக்கப் செல்லும் மீனவர்களின் வாழ்வும் ஒன்றுதான் என்று மீனவ மக்கள் அடிக்கடிச் சொல்வார்களாம்.

வீரர்களும் மீனவர்களும் உயிருடன் திரும்புவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று பேட்டியில் உருகியுள்ளார்.

‘மண்டாடி’க்காக கடலில் பாய்மரப் படகைச் செலுத்துவது, மீன்பிடிப்பது ஆகியவற்றுக்காகத் தீவிர பயிற்சி மேற்கொண்டாராம் சூரி.

முழுக்க முழுக்க காற்றை மட்டுமே நம்பிச் செல்லும் படகைக் கையாள்வது அவ்வளவு எளிதல்ல என்கிறார்.

“படகைக் கையாள்வதற்கான ‘நைலான்’ கயிறு கத்திக்குச் சமமானதாம்‌. அவ்வளவு கூர்மையாக இருக்கும்.

“கயிற்றின் போக்கில் சென்று படகைக் கட்டுப்படுத்த வேண்டும். சற்றுக் கவனக்குறைவாக கயிற்றைக் கையாண்டால் உள்ளங்கையில் இருக்கும் சதை பிய்ந்துவிடும்.

“இதைத் தவிர மேலும் பல வேலைகள் உள்ளன. தொண்டி பகுதியில் உள்ள மீனவ குடும்பங்களுடன் சில நாள்கள் பேசிப் பழகினேன். அங்கிருந்த அக்கா, தங்கைகள் என்னிடம் மிகுந்த பாசம் காட்டினர்,” என்கிறார் சூரி.

இவர் சந்தித்த பல மீனவர்களின் உள்ளங்கையில் குண்டூசியை வைத்து குத்தியபோது குண்டூசிதான் வளைந்து போனதாம். அந்த அளவுக்கு அவர்களின் கைகள் காப்பு காய்ச்சி உள்ளதாகக் கூறியுள்ளார்.

பாய்மரப் படகுப் போட்டியை கதைக்களமாக வைத்து உருவாகிறது ‘மண்டாடி’.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு எவ்வளவு முக்கியமோ, அதற்கு இணையானது பாய்மரப் படகுப் போட்டி.

ராமநாதபுர மாவட்டம் தொண்டி பகுதியில் நடக்கும் படகுப் போட்டியில் ஆண்டுதோறும் 200 படகுகள் வரை பங்கேற்கின்றன.

ஊரே கூடி நின்று மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தப் போட்டியைத் திருவிழா போன்று பெரிதாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்