திரைத்துறையில் வாரிசுகள் எதிர்கொள்ளும் சவால்கள்: ஷிவானி

திரைத்துறையில் வாரிசுகள் எதிர்கொள்ளும் சவால்கள்: ஷிவானி

1 of 2
படம்: ஃபேஸ்புக்/ஷிவானி ராஜசேகர்
படம்: ஃபேஸ்புக்/ஷிவானி ராஜசேகர்

06 Nov 2026 - 3:54 pm

2 mins read

திரையுலகில் முன்னணி நடிகர்கள், பிரபலங்களின் வாரிசுகள் நுழைவது எளிதாகத் தோன்றினாலும், அவர்களுக்குள்ளும் பல்வேறு அழுத்தங்களும் சவால்களும் நிறைந்தே இருக்கின்றன.

திரையுலகக் பின்னணியில் இருந்து வந்து, தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகில் கவனிக்கத்தக்க கதாநாயகியாக உருவெடுத்துள்ளார் நடிகை ஷிவானி ராஜசேகர்.

பிரபல நடிகர் டாக்டர் ராஜசேகர், நடிகை– ஜீவிதா தம்பதியின் மூத்த மகளான ஷிவானி, மருத்துவப் படிப்பை (எம்பிபிஎஸ்) முடித்துவிட்டு, நடிப்புத்துறையில் தனது முத்திரையைப் பதித்து வருகிறார்.

அண்மைய பேட்டி ஒன்றில், சினிமா பின்னணியைக் கொண்ட குடும்பத்திலிருந்து வருவதால் தனக்கு ஏற்படும் அனுபவங்கள் குறித்தும் திரையுலகப் பயணம் குறித்தும் அவர் விரிவாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சிறு வயதிலிருந்தே வீட்டில் சினிமா, மருத்துவம் சார்ந்த உரையாடல்களைக் கேட்டே வளர்ந்ததாகக் கூறும் ஷிவானி, தனது தந்தையையே முன்மாதிரியாகக் கொண்டுள்ளார்.

பள்ளிப்படிப்பை முடித்தவுடன், ‘கைவசம் ஒரு தொழில் இருந்தால் அது எதிர்காலத்திற்குப் பெருமளவு நம்பிக்கையைக் கொடுக்கும்’ என்று அவரது தந்தை கூறிய அறிவுறுத்தலின் பேரிலேயே எம்பிபிஎஸ் படிப்பை முடித்தாராம்.

என்னதான் நடிகையாக மாறிவிட்டாலும், மருத்துவத்துறையின் புதிய தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதாகச் சொல்கிறார்.

“அம்மா, அப்பா இருவருமே திரையுலகில் இருந்ததால் கல்வியில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர். ‘திறமைகள் நிறைய இருந்தாலும்கூட திரையுலகில் வெற்றி, தோல்வியை யாராலும் கணிக்க முடியாது. அதனால் படிப்பை முடித்த பின்னர் நீ விரும்பிய துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தத் தேர்வில் உறுதியாக இருக்க வேண்டும்’ என அடிக்கடி அறிவுறுத்துவார்கள்.

“அவர்கள் சொல்வதில் இருந்த நியாயம் புரிந்தது. உண்மையைச் சொல்லப்போனால் அந்த அறிவுரைதான், நான் அப்பாவை முன்மாதிரியாகக் கொள்ளக் காரணமாக அமைந்தது.

“பிரபலங்களின் பிள்ளைகளாக இருப்பதால் சினிமா வாய்ப்புகள் எளிதில் கிடைத்துவிடும் என்பது பொதுவான எண்ணம். ஆனால், யதார்த்தம் முற்றிலும் வேறானது,” என்கிறார் ஷிவானி.

திரைத்துறையில் போட்டி அதிகம். புதிதாக படம் எடுக்கும் இயக்குநர்கள் சிலர், ‘இவர்களிடம் கதை சொல்லப்போனால் பெற்றோர்களிடமும் சொல்ல வேண்டி வருமோ’ என்ற அச்சத்தினாலோ ‘புதுமுகக் குழுவின் படங்களில் இவர்கள் நடிக்க மாட்டார்கள்’ என்ற தவறான புரிதலினாலோ தங்களை அணுகாமலேயே விட்டுவிட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், ‘வாரிசு’ என்ற அடையாளமே சில நேரங்களில் வாய்ப்புகளுக்குத் தடையாகவும் அமைவதாகக் கூறியுள்ளார்.

தனக்கான கதைகளைத் தானே கேட்டுத் தேர்வு செய்வதாகக் கூறியுள்ள ஷிவானி, முடிவெடுப்பதில் குழப்பம் இருந்தால் மட்டுமே குடும்பத்துடன் விவாதிப்பதாகத் தெளிவுபடுத்துகிறார்.

‘அன்பறிவு’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய தமிழ்ப் படங்களின் வெற்றிக்குப் பிறகு, தற்போது ஜிவி பிரகாஷுடன் ‘வெக்கை’, சண்முகபாண்டியனுடன் ‘வாணவேடிக்கை’ ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளாராம்.

“சினிமா உலகில் நிலையான இடத்தைப் பிடிக்கத் தொடர்ச்சியான உழைப்பும் நல்ல கதைகளுமே தேவை. அதை உணர்ந்து வெற்றிக்காக ஓடிக்கொண்டே இருக்கிறேன். திரையுலகில் எனது தனித்துவ அடையாளத்தை நிறுவுவதில் உறுதியாக இருக்கிறேன்,” என்கிறார் ஷிவானி.

குறிப்புச் சொற்கள்