தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாழ்க்கையை அழகாக்கும் கதாபாத்திரங்கள்: நிகிலா

3 mins read
679fd057-b73e-48b4-ab21-641534754b8d
நிகிலா விமல். - படம்: ஊடகம்

’வாழை’ படத்தில் ‘பூங்கொடி டீச்சர்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிகிலா விமலுக்கு, தமிழ் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், அண்மைக்காலமாக ரசிகர்கள் தம்மை அழகிய லைலா என்று குறிப்பிட்டு வருவதாகக் கூறினார்.

ஆனால், பூங்கொடி டீச்சர் என்று தன்னை அழைப்பதுதான் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் ஒரு கதாபாத்திரமாக மக்கள் மனதில் நிலைத்திருப்பதில் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டார்.

“இப்படிப்பட்ட அருமையான ஒரு கதாபாத்திரத்தை எனக்கு அளித்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி. அவர் மிகவும் கடினமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர். நாமெல்லாம் அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வது குறித்து கனவில்கூட நினைத்துப்பார்க்க முடியாது.

“பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட போதிலும் தொடர்ந்து உழைத்திருக்கிறார். அங்கிருந்து தொடங்கி இதோ இங்கே இந்த மேடையில் நிற்கிறார் என்றார் நிகிலா விமல்.

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை ஒரு திரைப்படமாக எடுத்து அதில் வெற்றி காண்பது மிகப்பெரிய விஷயம் என்று குறிப்பிட்ட அவர், மாரியின் வாழ்க்கையைத் தழுவிய படத்தில் ஒரு பகுதியாக இருந்தமைக்காக மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

“எல்லோரும் என்னை பூங்கொடி டீச்சர் என்று கூறும்போது உற்சாகமாக உணர்கிறேன். இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள்தான் ஒரு நடிகையின் வாழ்க்கையை மேலும் அழகாக்குகிறது.

“’வாழை’ படத்தின் வெற்றியைக்காண நான் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தேன். இப்போது அப்படிப்பட்ட நிகழ்வில் பங்கேற்பதில் மிகுந்த மனநிறைவு ஏற்பட்டுள்ளது,” என்றார் நிகிலா விமல்.

தான் இயக்கிய ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் நிகிலா விமலை நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். ஆனால் அந்த முயற்சி சாத்தியமாகவில்லையாம்.

“நிகிலாவை இந்தப் படத்தில் நடிக்க வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி. இதில் சொல்லப்பட்டுள்ள ஓர் எளிய உண்மை தமிழ்ச் சமூகத்தை எந்த அளவுக்கு தொந்தரவு செய்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். வலியைவிட எளியதுக்கு மதிப்பு அதிகம்,” என்கிறார் மாரி.

இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, பொன்வேல், ராகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரூ.5 கோடி செலவில் உருவான இந்தப்படம், கடந்த ஆகஸ்டு 23ஆம் தேதி திரைக்கு வந்து இதுவரை ரூ.40 கோடி வரை வசூல் கண்டுள்ளது.

இந்நிலையில், இப்படம் திரையரங்குகளில் 75 நாள்கள் கடந்ததையடுத்து வெற்றி விழா நடைபெற்றது.

இதில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், தன்னைப்பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ‘வாழை’ படத்தை எடுத்ததாக குறிப்பிட்டார்.

“இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை நான் நிச்சயமாகப் படமாக்குவேன். அது மட்டுமல்ல, மேலும் பல பாகங்களை உருவாக்க முடியும்.

“‘வாழை’ படத்தில் சிவனந்தன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பொன்வேல். இந்த கதாபாத்திரம் இரண்டாம் பாகத்திலும் தொடரும்,” என்றார் மாரி செல்வராஜ்.

இதற்கிடையே, துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மாரி. அதன் பின்னர், தனுஷை வைத்து புதுப்படம் இயக்கப் போவதாகத் தெரிகிறது.

இவ்விரு படங்களும் முடிந்த பிறகே ‘வாழை’ இரண்டாம் பாகத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளாராம். எனினும் இரண்டாம் பாகத்துக்கான கதை, திரைக்கதையை அவர் ஏற்கெனவே தயார் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ‘வாழை’ படம் செப்டம்பர் 27ஆம் தேதியன்று ஓடிடி தளத்தில் வெளியீடு காண்கிறது. இப்படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இதனால் ரசிகர்கள் இந்தப் படம் குறித்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஓடிடி தளத்தில் இப்படத்தை வெளியிடுவதன் மூலம் மேலும் ஏராளமானோர் இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இப்படத்தில் நடித்த சிறுவர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் புதுப்பட வாய்ப்புகளும் தேடி வருகின்றனவாம்.

குறிப்புச் சொற்கள்