இந்தித் திரையுலகின் நட்சத்திரத் தம்பதியான நடிகர் தர்மேந்திரா-நடிகை ஹேமமாலினியின் வாரிசு நடிகை இஷா தியோல்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் தற்போது ‘பிரதாப்’ படத்தின் மூலம் திரையுலகில் மீண்டும் திரையில் தோன்றுகிறார்.
சச்சின் சரப் இயக்கத்தில் உருவாகியுள்ள அப்படத்தில், அமித் சாத் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 20ஆம் தேதி திரைகாண உள்ளது.
இந்நிலையில், படம் குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட இஷா தியோல், திரையுலகம் தனது வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்தும் மனம்திறந்துள்ளார்.
“திரையுலகம் எப்போதுமே எனது வாழ்க்கையில் முக்கியமான ஓர் அங்கமாக இருந்து வருகிறது. திரைப்படங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட குடும்பத்தில் வளர்ந்ததால், திரைப்படக் கலை குறித்த புரிதலும் ரசனையும் இயல்பாகவே எனக்கு ஏற்பட்டது,” என்கிறார் இஷா.
மேலும், இப்படத்தில் தாம் ஏற்றுள்ள பூனம் கதாபாத்திரம் பல்வேறு உணர்வுகளைக் கொண்ட முதிர்ச்சியான கதாபாத்திரம் என்றும் தெரிவித்துள்ளார்.
“கணவரின் புகழால் அடையாளம் பெற்ற அவள், சூழ்நிலைகள் மாறும்போது புதிய சவால்களை எதிர்கொள்கிறாள். தன்னை மீண்டும் அடையாளம் கண்டு வாழ்க்கையில் முன்னேறப் போராடும் பெண்ணின் உணர்வுபூர்வமான பயணம் இது. தற்போதைய தலைமுறை நடிகரான அமித் சாத் உடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது,” எனத் தெரிவித்துள்ளார் இஷா.
கேமரா முன்பு நிற்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனது தனித்துவமான அணுகுமுறையிலேயே கையாள விரும்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நடிகையாக தனக்கு உற்சாகத்தையும் புதிய அனுபவங்களையும் தரக்கூடிய படங்களில் தொடர்ந்து நடிப்பதே தமது விருப்பம் என இஷா தெரிவித்துள்ளார்.
