சினிமாவுக்கு நேர்மையும் உழைப்பும்தான் தேவை: ரியோ ராஜ்

சினிமாவுக்கு நேர்மையும் உழைப்பும்தான் தேவை: ரியோ ராஜ்

படம்: விகடன்

02 Oct 2026 - 4:06 pm

2 mins read

‘கனா காணும் காலங்கள்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் அறிமுகமாகி, ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் கதாநாயகன், வெள்ளித்திரை நடிகர் எனத் தொடர்ந்து நிதானமாகவும் நம்பிக்கையுடனும் தனது திரைப் பயணத்துக்குப் பாதை அமைத்து வருகிறார் நடிகர் ரியோ ராஜ்.

தற்போது தயாரிப்பாளராகவும் அவர் புதிய பரிணாமம் எடுத்துள்ளார்.

“இங்கே ஒரு மனிதனுக்கு மரியாதை கொடுக்க படிப்போ, பணமோ தேவையில்லை. சினிமாவுக்குத் தேவை நேர்மையும் உழைப்பும்தான். நீங்கள் நேர்மையாக இருந்தால், இந்தத் திரைத்துறை உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும்,” என்கிறார் ரியோ ராஜ்.

அண்மைய பேட்டி ஒன்றில், தனது தொடக்கக்கால வாழ்க்கையைப் பகிர்ந்துள்ள அவர், இயக்குநர் வெற்றிமாறன் மூலம்தான் ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

“வறுமைக்கோட்டுக்குக் கீழேதான் இருந்தது எங்கள் குடும்பம். அம்மா தையல் கலைஞர், அப்பா ஓட்டுநர். கல்லூரிப் படிப்பைத் தொடரமுடியாத சூழலில் பகுதிநேர வேலையைப் பார்த்துக்கொண்டுதான் படித்தேன். திரைத்துறை மீதுள்ள ஆர்வம் காரணமாக ஈரோட்டில் இருந்து சென்னை வந்து பல நடிப்புத் தேர்வுகளில் கலந்துகொண்டேன்.

“சன் மியூசிக் அலைவரிசையில் ‘சுடச்சுட சென்னை’ நிகழ்ச்சியையும் அதைத் தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் ‘சரவணன்’ கதாபாத்திரத்தையும் ஏற்றது எனது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

“சரவணன் மீனாட்சி’ என்னைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கொண்டு சேர்த்துவிட்டது. இன்றைக்கும் கிராமப் பகுதிகளுக்குச் சென்றால் என்னைச் சரவணனாகவே பார்த்து அன்போடு உணவளித்து விருந்தோம்பல் செய்கிறார்கள்,” என்று கூறியுள்ளார் ரியோ.

திரைப்பட வாய்ப்புகளைத் தேடி அலைந்த நாள்களையும் ரியோ நினைவுகூர்ந்துள்ளார்.

ஒருமுறை காசு இல்லாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கியபோது, ஒரு காவலர் லத்தியால் தட்டி ‘தொலைக்காட்சியில் நடித்த பையன் தானே நீ. ஒழுங்காக ஏதாவது வேலை பார்த்து பிழைப்பைக் கவனிக்கப் பாரு’ என்று அறிவுரை கூறினாராம். அந்த வார்த்தைகள் தம்மை வெற்றியை நோக்கி மேலும் வேகமாக ஓடவைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

“அதன் பின்னர் சிவகார்த்திகேயன் அண்ணன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படம் அமைந்தது. இப்போது ‘மேடி’ படத்தில் நடித்துக்கொண்டே தயாரிப்பாளராகவும் இரண்டு படங்களைத் தொடங்கியிருக்கிறேன்.

“என் நண்பர் ‘மிர்ச்சி’ விஜய் இணைந்து நடிக்கிறார். நாங்கள் இருவரும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நினைத்தது இப்போது நடக்கிறது.

“மேலும் சில நண்பர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசையுள்ளது. நமக்குப் பிடித்த படங்களை மக்களுக்கும் பிடித்த மாதிரி சொல்ல முடியுமா என யோசித்துச் செயல்படுகிறேன்.

“வறுமையின் பிடியில் இருந்து தொடங்கி, உழைப்பும் நம்பிக்கையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு தமிழ்த் திரைத்துறையில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளதாக நினைக்கிறேன். எனது ஓட்டம் தொடரும்,” என்று கூறியுள்ளார் ரியோ ராஜ்.

குறிப்புச் சொற்கள்
நடிகர்திரைப்படம்இயக்குநர்தொலைக்காட்சி