‘தி இந்தியா ஸ்டோரி’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்திப் படம் வெளியீடு காணும் முன்பே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன உலகில் மக்கள் எதிர்கொள்ளும் உணவு கலப்படங்களை விவரிக்கும் கதையை வைத்து இப்படம் உருவாகின்றது.
இப்படத்தின் கதையைக் கேட்டு தாம் தூக்கமிழந்து தவிப்பதாகக் கூறியுள்ளார் படத்தின் நாயகி காஜல் அகர்வால்.
இந்தக் கதையைக் கேட்டதும் தம் மனத்தை ஒருவித பயம் தொற்றிக்கொண்டது என்றும் பல தூக்கமற்ற இரவுகளைத் தந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோனேன். அது எனக்குப் பல தூக்கமற்ற இரவுகளைத் தந்தது. எனக்குள் ஒருவிதப் பயம் தொற்றிக்கொண்டது.
“இந்த உண்மைக் கதையை மக்களிடம் எப்படிக் கொண்டு சேர்க்கப் போகிறோம், தனிப்பட்ட முறையில் நம் குடும்பத்தையும் வாழ்க்கையையும் இதிலிருந்து எப்படிக் காப்பாற்றப்போகிறோம் என்று என் மனம் தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் கார்ப்பரேட், உள்ளூர் உணவு மோசடிகளை திகிலான பாணியில் இப்படம் அக்குவேறு ஆணி வேறாக அலச உள்ளதாகத் தெரிகிறது. நாம் தினமும் சாப்பிடும் உணவில் கலக்கப்படும் நச்சுகள், அதன் பின்னணியில் உள்ள மாஃபியாக்கள் குறித்துப் பேசும் ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே சினிமா வட்டாரங்களிலும் மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

