ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கூலி’.
மலையாளத்திலிருந்து செளபின் ஷாஹிர், கன்னடத்திலிருந்து உபேந்திரா, தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, இந்தியிலிருந்து ஆமிர் கான் என இந்திய நட்சத்திரப் பட்டாளமே அப்படத்தில் நடித்திருந்தனர்.
மலையாள நடிகர் செளபின் ஷாஹிர்க்கு தமிழில் நல்ல அறிமுகம் தந்த படமாக ‘கூலி’ விளங்குகிறது.
அப்படத்தில் தமக்குக் கிடைத்த வாய்ப்பு பற்றி அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் செளபின் பேசியது அனைவரும் அறிந்ததே.
தற்போது ரஜினிகாந்த், ஆமிர் கான், உபேந்திரா, லோகேஷ் கனகராஜ் எனப் பிரபலங்கள் பலருடனும் ‘கூலி’ படப்பிடிப்புத் தளத்தில் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தன்னுடைய சமூக ஊடகத்தில் செளபின் வெளியிட்டிருக்கிறார்.
சில நேரங்களில் நமது கனவையும் விஞ்சியதாக சினிமா இருக்கிறது என அப்பதிவில் குறிப்பிட்டிருந்த அவர், உங்கள் அன்புக்கு நன்றி என அப்பதிவில் குறிப்பிட்டார்.
மேலும், “தயாள் எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தமான கதாபாத்திரம். ‘கூலி’ எப்போதும் என் இதயத்துக்கு மிக நெருக்கமான திரைப்படமாக என்றும் இருக்கும்,” என்றார் செளபின் ஷாஹிர்.