புதுடெல்லி: உலக அளவில் வேலைவாய்ப்பு, உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில், வளர்ந்த, முன்னேறிய பொருளியல் நாடுகளில் குடியுரிமை பெறுவதிலும் இந்தியர்கள் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பு (OECD) வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2020 முதல் 2024 வரையிலான ஐந்தாண்டுக் காலகட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 9.25 லட்சம் இந்தியர்கள் பல்வேறு முன்னேறிய பொருளியல் நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.
இதற்கு முந்தைய ஐந்தாண்டுக் காலகட்டத்துடன் (2015-2019) ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை ஏறக்குறைய 41.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. அப்போது 6.54 லட்சமாக இருந்த இந்தியர்களின் குடியுரிமை பெறும் எண்ணிக்கை, தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 38 முன்னணிப் பொருளியல் நாடுகள் அடங்கிய அந்த அமைப்பில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 87 லட்சம் பேர் புதிதாகக் குடியுரிமை பெற்றுள்ளனர்.
வெளியான தரவுகளின் அடிப்படையில், குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 2.30 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளின் குடியுரிமையை அதிகாரபூர்வமாகப் பெற்றுள்ளனர். இதில் நாடு வாரியாகப் பார்க்கும்போது, கனடாவில் 87,320 பேர், அமெரிக்காவில் 48,820 பேர், ஆஸ்திரேலியாவில் 28,969 பேர் என்ற எண்ணிக்கையில் அதிக அளவில் இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறமையான இந்தியர்கள் தங்களின் எதிர்காலப் பாதுகாப்பு, சிறந்த வாழ்க்கைச் சூழலைத் தேடி மேற்கு நாடுகளை நோக்கிப் படையெடுப்பது தொடர்ந்து அதிகரித்துவருகிறது என்பதை இந்தத் தரவுகள் தெளிவாக உணர்த்துகின்றன.
பொருளியல் ரீதியாக இந்தியா அசுர வளர்ச்சி கண்டுவரும் நிலையில், உலக அளவில் புதிய வாய்ப்புகளைத் தேடி இந்தியர்கள் புலம்பெயரும் போக்கு சற்றும் குறையவில்லை என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.
