தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், அண்மைய நேர்காணல் ஒன்றில் பாலிவுட், தென்னிந்தியத் திரையுலகின் செயல்பாடுகள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திப் படங்களை ஏன் குறைவாகத் தேர்ந்தெடுக்கிறார் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், “எனக்கு எப்போதும் வேலையின் தரம்தான் முக்கியம். தென்னிந்திய சினிமாவில் எனக்குக் கிடைத்த அளவுக்குத் தரமான, வலுவான கதாபாத்திரங்கள் பாலிவுட்டில் கிடைக்கவில்லை.
“படங்களின் எண்ணிக்கையை விட தரத்திற்கே நான் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறேன்.
“தென்னிந்திய சினிமா அத்தகைய சிறந்த வாய்ப்புகளைத் தாராளமாக வழங்கும்போது, பாலிவுட்டில் சாதாரணமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு எழுந்ததில்லை,” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பாலிவுட் குறித்துப் பேசிய அவர், தென்னிந்திய சினிமாவிடம் இருந்து பாலிவுட் முக்கியமாகக் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் ‘நேரம் தவறாமை’தான் என்று சுட்டிக்காட்டினார்.
“இந்திப் படப்பிடிப்புகளில் எதுவும் சரியான நேரத்திற்கு நடப்பதில்லை. ஆனால் தென்னிந்தியாவில் மிகக் கச்சிதமான கட்டுப்பாட்டுடனும் கால நேரத்துடனும் வேலை செய்கிறார்கள்.
“நான் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று பழகியவள் என்பதால் அந்த ஒழுக்கம் எனக்குப் பிடிக்கும்.
“பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான்தான் என்னை மிகவும் நீண்ட நேரம் காத்திருக்க வைத்தவர். அவர் மதியமோ அல்லது மாலையிலோதான் படப்பிடிப்புக்கே வருவார்.
“அந்த நேரத்தில் எனக்குக் கிடைத்த இடைவெளியில் படப்பிடிப்புத் தளத்திலேயே இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று விடுவேன்,” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்தார்.
மேலும், சினிமாவில் பெண்களின் சித்திரிப்பு மாறியுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த காஜல், “தற்போது பெண்களுக்கு வலிமையான, சுதந்திரமான கதாபாத்திரங்கள் எழுதப்படுகின்றன.
“பெண்களின் கவர்ச்சியை மட்டுமே மையமாகக் காட்டும் நிலை இப்போது மாறியிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே அத்தகைய காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பதில் நான் உறுதியாக எல்லை வகுத்திருந்தேன்,” என்றும் கூறினார்.
தொடர்ந்து பல முன்னணிப் படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால், அடுத்ததாக ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்திலும், நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’ படத்தில் ‘மண்டோதரி’ கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைத்துறைக்கு வருவதற்கு முன் மாடலிங், விளம்பரத் துறையில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த இவர், 2020ஆம் ஆண்டு மேடம் டுஸாட்ஸ் (Madame Tussauds) சிங்கப்பூர் மெழுகு அருங்காட்சியகத்தில் மெழுகு உருவச் சிலை அமைக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது.
திருமணத்திற்குப் பிறகும் குழந்தைப் பேற்றிற்குப் பிறகும் தமக்கு அமையும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து திறம்பட நடித்து வரும் காஜல், தென்னிந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தொடர்ந்து முதலிடத்தில் வலம் வருகிறார்.

