அண்மைக்காலமாகத் தமிழ்த் திரைத்துறையில் ஒரு பெரும் அலை வீசிவருகிறது.
கோடிக்கணக்கில் செலவிடப்பட்ட பல பிரம்மாண்டமான நட்சத்திரப் படங்கள் வசூலில் மிகப்பெரிய சறுக்கலைச் சந்தித்தபோது, குறைந்த செலவில் உருவான சில நடுத்தரப் படங்கள் தமிழ்த் திரையின் முகத்தையே மாற்றி எழுதியுள்ளன.
“தமிழ்த் திரையுலகம் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்கிறது, (Tamil Cinema is healing),” என்ற குரல் தற்போது இணையத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த காலங்களில், நட்சத்திரங்களின் பிம்பம், வழக்கமான காட்சியமைப்பு, அதீத வன்முறை, காதடைக்கும் விளம்பரங்கள் மட்டுமே சினிமாவின் வெற்றியைக் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தன.
பலவீனமான கதையோடு வெளியீடு கண்ட பல படங்கள் ரசிகர்களாலேயே முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில், ஓடிடி தளங்களின் வரவால் உலகத் தரத்திலான படங்களைப் பார்த்துப் பழகிய சராசரித் தமிழ்ப் பார்வையாளர்கள், வெறும் சம்பிரதாயமான படங்களுக்காகத் திரையரங்குகளுக்கு வரத் தயாராக இல்லை என்பதை இந்தத் தோல்விகள் பறைசாற்றின.
2026ஆம் ஆண்டு வெளியீடு கண்ட சில திரைப்படங்கள் இத்தகைய சலிப்பானச் சூழலை மாற்றிக் காட்டின. எந்தவிதப் பெரிய பின்புலமும் இல்லாமல், கதையை மட்டுமே நம்பி வெளியான ‘மண்டாடி’, ‘மொத ராத்திரி’, ‘டோரதி’, ‘பத்தா’ போன்ற படங்கள் தமிழ்த் திரையுலகின் போக்கைத் திசைதிருப்பின.
குறிப்பாக, முன்னணி நட்சத்திரமான விஜய் சேதுபதி ஒரு சிறுவனுடன் இணைந்து நடித்த ‘பத்தா’ படமும் சூரி கதாநாயகனாக வலம் வந்த ‘மண்டாடி’ படமும் நட்சத்திர அந்தஸ்தைக் கடந்து ‘கதைதான் உண்மையான நாயகன்’ என்பதை அழுத்தமாக நிரூபித்தன.
நவீன தொழில்நுட்பமும் அதிநவீனப் பிரம்மாண்டங்களும் திரைத்துறை வளர்ச்சிக்கு அவசியம்தான் என்றாலும், வலுவான திரைக்கதை இல்லாமல் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டுவது தனக்குத்தானே குழி வெட்டுவதற்குச் சமம் என்பதைத் தயாரிப்பாளர்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்.
மண்ணின் மணத்தோடும் எளிய மனிதர்களின் உளவியலோடும் பேசத் தொடங்கியிருக்கும் இந்தப் புதிய படைப்புகள், தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்திருக்கும் ஒரு ஜனநாயக மாற்றமாகும்.
அதிகாரமிக்க நட்சத்திரங்களின் பிம்பங்களை உடைத்துத் திறமைக்கும் யதார்த்தமான கதைக்களங்களுக்கும் கதவுகள் திறந்திருப்பது, தமிழ்த் திரையுலகின் பொற்காலத்தை நோக்கி நகர்வதற்கான நற்செய்தியாகவே பார்க்கப்படுகிறது என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.
