’தொட்டா சிணுங்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தேவயானி.
திரையுலகில் கவர்ச்சி காட்டாமல் தாக்குப்பிடிக்க முடியாது என்ற பிம்பத்தை உடைத்துக் காட்டியவர் இவர்.
இந்நிலையில், தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் அதியமானிடம் சினிமா பயின்ற சிவா ஆறுமுகம் இயக்கும் ‘நிழற்குடை’ படத்தில் நடித்துள்ளார் தேவயானி.
சிவா ஆறுமுகத்துக்கு தமிழ்ப்பற்று அதிகமாம். அதனால்தான் தூய தமிழில் தலைப்பு வைத்திருப்பதாகச் சொல்கிறார்.
“இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில், ‘நாம் நன்றாகப் படித்துவிட்டோம், கைநிறைய சம்பாதிக்கிறோம்’ என்கிற மனநிலைதான் ஓங்கி நிற்கிறது. பெற்றோருக்கும் பெரியவர்களுக்கும் உரிய மரியாதை தருவதில்லை. குடும்ப உறவுகள் குறித்தும் கவலைப்படுவதில்லை.
“அதனால் பல குடும்பங்களில் தலைதூக்கும் பிரச்சினைகளை அலசும் படமாக ‘நிழற்குடை’ உருவாகிறது,” என்கிறார் சிவா ஆறுமுகம்.
“தேவயானி ‘தொட்டா சிணுங்கி’ படத்தில் அறிமுகமானபோது நான் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். ஏறக்குறைய 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே குழு இணைந்துள்ளது.
“நீண்ட இடைவெளிக்குப்பிறகு தேவயானி திரைப்படத்தில் நடிப்பதால் கதை தேர்வில் மிகுந்த கவனம் காட்டுகிறார். கதை பிடித்துப்போன பிறகே நடிக்க முன்வந்தார். கதையின் நாயகி என்று சொல்வதைவிட படத்தின் முதுகெலும்பு என்று அவரைக் குறிப்பிடலாம்.
“முன்பு தமிழில் பேசுவதில் அவருக்குப் பிரச்சினை இருந்தது. இப்போது மாறிவிட்டது. கதைப்படி அவர் ஈழத்தமிழில் பேச வேண்டும். அதற்காக பயிற்சி எடுத்து சிறப்பாகப் பேசியுள்ளார்.
“பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், இன்றளவும் அவரது ஈடுபாடும் அர்ப்பணிப்பும் மாறவே இல்லை. தனது கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்குவதில் மிகுந்த அக்கறை காட்டுவார்.
“நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருந்தவருக்கு இந்தப்படம் நிச்சயம் மனநிறைவைத்தரும்,” என்கிறார் இயக்குநர் சிவா ஆறுமுகம்.
இந்தப் படத்தில் வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரங்களாக நிஹாரிகா, அஹானா, விஜித் கண்மணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
தர்ஷன் என்ற புதுமுகத்தை முக்கியமான கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்கள்.
நரேன் பாலகுமார் இசையமைக்கிறார். இவர் நிறைய விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தவராம். ஏ.ஆர்.ரகுமானின் மாணவராம்.
பாடல்களை பத்மஜா ஸ்ரீராம் என்ற அறிமுக பாடலாசிரியர் இயற்றியுள்ளார்.