‘எல்லம்மா’வில் நாயகனாக அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீபிரசாத்

‘எல்லம்மா’வில் நாயகனாக அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீபிரசாத்

படம்: விகடன்

13 Nov 2026 - 4:33 pm

2 mins read

கடந்த 25 ஆண்டுகளாகத் தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்குத் தனது துள்ளலான இசையால் உயிர்கொடுத்து வந்த ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீபிரசாத் (டிஎஸ்பி), தற்போது ‘எல்லம்மா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் திரைக்கு வரவுள்ள அப்படம் குறித்தும் தனது திரைப்பயணத்தின் புதிய அத்தியாயம் குறித்தும் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் மனம் திறந்துள்ளார்.

“எல்லம்மா என்பது எல்லை அம்மனைக் குறிக்கும் பெயராக இருந்தாலும், இது முழுக்க பக்திப் படம் அல்ல,” எனத் தெளிவுபடுத்தி உள்ள தேவி ஸ்ரீபிரசாத், இது நாட்டுப்புற இசையையும் நடனத்தையும் மையமாகக் கொண்ட வணிகத் திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தந்தை-மகன் உறவு, அழகான காதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களும் அதில் நிறைந்துள்ளன. இப்படத்தின் முதல் பாடலுக்காகத் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த நூறு பாரம்பரிய நாட்டுப்புற இசைக்கலைஞர்களை ஒன்றிணைத்துப் பதிவுசெய்துள்ளது சிறப்பம்சமாகும்.

ஏற்கெனவே பல தயாரிப்பாளர்கள் தன்னை நடிக்க அழைத்தபோதும், தனக்கான சரியான கதைக்காகக் காத்திருந்ததாகக் கூறுகிறார் தேவி ஸ்ரீபிரசாத் (டிஎஸ்பி).

‘பலகம்’ படத்தின்மூலம் அனைத்துலக விருதுகளை வென்ற இயக்குநர் வேணு யெல்டண்டி இப்படத்தை இயக்கியுள்ளார். ‘தில்’ ராஜு தயாரித்துள்ளார்.

“எல்லையம்மனே இந்தக் கதையை எனக்கு அனுப்பிவைத்ததுபோல் உணர்ந்தேன். கதையைக் கேட்ட ஐந்தாவது நிமிடத்திலேயே நடிக்கச் சம்மதித்துவிட்டேன்,” என்கிறார் டிஎஸ்பி.

மேடை நிகழ்ச்சிகளில் இவரது ஆட்டத்தைப் பார்த்துவிட்டு சுகுமார், திரிவிக்ரம் போன்ற இயக்குநர்கள் தொடர்ந்து ஊக்குவித்ததும் ‘கொவிட்-19’ காலகட்டத்துக்குப் பிறகு வாழ்க்கையில் சாதிக்க நினைத்தவற்றைச் செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதுமே இவரை நடிப்புப் பக்கம் திருப்பியுள்ளது.

முன்னதாகச் சிரஞ்சீவியின் ‘ஷங்கர் தாதா எம்பிபிஎஸ்’, ‘கைதி எண் 150’, பிரபுதேவா இயக்கிய ‘வெடி’ ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய அனுபவங்களைச் சில நேர்காணல்களில் அவர் பகிர்ந்துகொண்டார்.

‘எல்லம்மா’ குறுங்காணொளியைப் (கிளிம்ஸ்) பார்த்துவிட்டு கமல்ஹாசன், நாகார்ஜுனா, அல்லு அர்ஜுன், ராம் சரண், சிறுத்தை சிவா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்தியது தனக்குக் கிடைத்த பெரிய ஆசீர்வாதம் என்கிறார்.

மேலும், 95 வயதில் மறைந்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய கடைசிப் படமான ‘சிங் கீதம்’ படத்துக்கு இசையமைத்ததையும் அவரிடம் நேரில் வாழ்த்து பெற்றதையும் தனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் அவர் நடித்த ‘சச்சின்’ படத்தின் ‘வா வா என் தலைவா’ பாடல் வரிகளைப் பதிவிட்டேன். ஒரு புதிய மாற்றத்தை நோக்கிப் பயணம் செய்யும் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றும் கூறியுள்ளார் தேவி ஸ்ரீபிரசாத்.

குறிப்புச் சொற்கள்