வெற்றி, தோல்வி, விருதுகள் என்று எதையும் எதிர்பார்த்து களமிறங்கும் பழக்கம் தனுஷுக்கு அறவே இல்லை.
பல படங்களில் நடித்து வந்தாலும், தனக்குள் இருக்கும் இயக்குநருக்கும் தீனிபோட அவர் மறப்பதில்லை.
அந்த வகையில், தனுஷ் இயக்கத்தில் அண்மையில் வெளியீடு கண்ட, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் விமர்சன, வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், தனுஷ் நடித்து வரும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ இந்திப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. அவரது ‘இட்லி கடை’ படத்தின் வெளியீடு சற்றே தாமதம் ஆகுமாம்.
இவரது அடுத்த படம் இயக்குநர்கள் ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, அருண் மாதேஸ்வரன், தமிழரசன் பச்சமுத்து இவர்களில் யாராவது ஒருவரின் படமாக இருக்கக்கூடும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அவர் இந்தியில் நடித்து வருகிறார்.
‘இட்லி கடை’யும் தனுஷ் இயக்கும் படம்தான். இனி இந்திப் படத்துக்காக பல நாள்கள் வடஇந்தியாவில் இருக்க வேண்டியிருக்கும் என்பதால் இரவு, பகல் பாராமல், பம்பரமாக உழைத்து ‘இட்லி கடை’யை இயக்கி முடித்துவிட்டாராம். இப்படத்தில் தனுஷும் நடித்துள்ளார்.
மேலும், அருண்விஜய், ராஜ்கிரண், சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே எனப் பலரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடந்து முடிந்திருக்கிறது.
மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தாலும், ஒரு பாடலை மட்டும் படமாக்க வேண்டியிருக்கிறதாம். அதை வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தனுஷ், ஷாலினி பாண்டே இருவருக்கான பாடல் அது. அநேகமாக தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் பாடல் படமாக்கப்படலாம் எனத் தகவல்.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகிறது ‘தேரே இஷ்க் மெய்ன்’. ஏற்கெனவே இவரது இயக்கத்தில் ‘ராஞ்சனா’, ‘அட்ராங்கி ரே’ என இரண்டு படங்களில் தனுஷ் நடித்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட நட்பும் புரிதலும் மூன்றாவது முறையாக இருவரையும் இணைத்துள்ளன.
இப்படத்தில் கிருத்தி சனோன் நாயகியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. தனுஷ், கிருத்தி சனோன் தொடர்பான காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இரவு நேரத்தில் மட்டுமே படப்பிடிப்பு நடக்கிறதாம்.
முதற்கட்டமாக டெல்லியில் மட்டும் தொடர்ந்து 40 நாள்கள் படப்பிடிப்புக்கு திட்டமிட்டுள்ளனர் என்றும் இன்னும் 15 நாள்கள் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்திப் படத்தை அடுத்து தனுஷ் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இதற்கிடையே சேகர் கம்முலா இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘குபேரா’ ஜூன் மாதம் வெளியாகிறது. இன்னும் இரண்டு வாரப் படப்பிடிப்பு இருக்கிறதாம்.
அதில் ராஷ்மிகா, தனுஷ் சம்பந்தப்பட்ட ஒரு காதல் பாடலை மட்டும் எடுக்க வேண்டியுள்ளதாம்.
இந்தப் பாடலில் நடித்து முடித்துக்கொடுத்த கையோடு, தனது ‘இட்லி கடை’ படக்குழுவுடன் பேங்காக் பறக்க உள்ளாராம் தனுஷ்.
இதற்கிடையே, நடிகர் அஜித் அடுத்து தனுஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கடந்த மூன்று நாள்களாக கோடம்பாக்க வட்டாரங்களில் பரவிய தகவல் ரசிகர்கள் இடையே பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
எனினும், அத்தகவலில் உண்மை இல்லை எனப் பின்னர் தெரியவந்தது.
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாக உள்ள நிலையில், அவரது தீவிர ரசிகர்கள் சமூக ஊடகம் மூலம் இந்த வதந்தியைப் பரப்பி உள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், தனுஷ் ரசிகர்களில் ஒரு தரப்பினர் இந்தத் தகவல் உண்மையாக இருக்கக்கூடும் என்று கருதுகிறார்களாம்.
“இயக்குநராகப் பெயரெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் தனுஷுக்கு உள்ளது. மூத்த நடிகர் ராஜ்கிரண் தொடங்கி, புதுமுகங்கள் வரை தனது இயக்கத்தில் நடிக்க வைத்துள்ளார்.
“எனவே, அவர் அடுத்தகட்டமாக முன்னணி நாயகர்களை வைத்து படம் இயக்கத்தான் திட்டமிடுவார். அந்த வகையில், தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க வாய்ப்பு அமைந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை,” என்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள்.