“அர்ஜுன் தாஸிடம் ஒருவித அப்பாவித்தனம் இருக்கும். அதை எப்போதுமே ரசிப்பேன்,” என்கிறார் இயக்குநர் விஷால் வெங்கட்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற தனது முதல் படத்தின் மூலம் நம்பிக்கையூட்டும் படைப்பாளியாக கோடம்பாக்கத்தில் முத்திரை பதித்தவர் இவர்.
“முதல் படத்தில் மனித உணர்வுகளை முதன்மைப்படுத்தி இருந்தேன். எனக்கு சினிமாவில் பணியாற்றுவதுதான் வாழ்வின் ஆகப்பெரிய மகிழ்ச்சி.
“எது கலைப்படம், எது வணிகப்படம் என்பதை ரசிகர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். இப்படித்தான் படம் எடுக்கவேண்டும் என்ற காலம்போய், திரைப்படம் என்பது இப்போது சகலமுமாக மாறியிருக்கிறது.
“திரைத்துறையில் அனைத்து ரகசியங்களும் இப்போது வெளியே தெரிகின்றன. படம் புதிதாக இருந்தாலும் யாராக இருந்தாலும் ஆதரவு கிடைக்கிறது. வித்தியாசமான படைப்புகளைக் கையில் எடுப்போருக்கு இதுதான் சரியான நேரம். இந்தச் சமயத்தில் என்னுடைய ‘பாம்’ திரைப்படம் வெளியீடு காண இருப்பதை நல்ல விஷயமாகக் கருதுகிறேன்,” என்கிறார் விஷால் வெங்கட்.
இதில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்க, காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பாலசரவணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்துள்ளனராம்.
“படத்தை முழுமையாக முடித்தபின் பார்த்தபோது ரசிகர்களையும் பார்க்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. ரசிகர்களும் ஒரு படத்தைப் பார்த்த பிறகுதான் அதன் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
“அர்ஜுன் தாஸ் நல்ல நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். கதையை எழுதி முடித்தபோது அவர்தான் முக்கியமான கதாபாத்திரத்துக்கு பொறுத்தமான தேர்வாக மனதில் தோன்றினார்.
“வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இதுவரை எதிர்மறை பாத்திரத்தில் மட்டுமே அவரைப் பார்த்துப் பழகிவிட்டோம். அவரிடம் உள்ள அப்பாவித்தனத்தை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
“ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குள்ளும் நுழையும்போது தனக்கென தனிப்பாணியை அவர் கடைப்பிடிக்கிறார். அதனால்தான் தனித்தன்மையுடன் கூடிய நடிப்பை அவரால் வழங்க முடிகிறது,” என்று பாராட்டுகிறார் விஷால் வெங்கட்.
இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அருமையான பாடல்களை அவர் மெட்டமைத்து தந்தவிதம் மிகுந்த மனநிறைவை அளித்துள்ளதாகக் கூறுகிறார்.
“நமது எண்ணங்களை நேர்மையாகப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். என்னைப்போல் சினிமாவை நேசிப்பவர்களுக்கு அந்தக் கடமை உள்ளது.
“இங்கே நியாயமாக நிகழவேண்டியவை நிகழாமல் போய்விடுகின்றன. அதனால் எழக்கூடிய சில கேள்விகளை ரசிகர்களின் மறுபரிசீலனைக்கு முன்வைக்கிறேன். அந்த வகையில் இந்தப்படம் பேசப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு,” என்கிறார் விஷால் வெங்கட்.

