மகாராணியாக நடிக்கும் நயன்தாரா

3 mins read
7161b13c-1d03-47bf-8e5a-dcf241fbb3e2
நயன்தாரா. - படம்: ஊடகம்

ஒரு திரைப்படம் வசூலில் பெரிதாகச் சாதிக்கும் பட்சத்தில், அதன் இயக்குநருக்குப் பாராட்டுகளுடன் பரிசுகளும் குவிந்துவிடும்.

அந்த வகையில், அறிமுக இயக்குநர் நித்திலன் சுவாமி நாதன் இயக்கத்தில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படத்தின் வசூல் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்புத் தரப்பு அவருக்குப் புதுக் கார் ஒன்றைப் பரிசளித்துள்ளது.

விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த ‘மகாராஜா’ படம் திரையரங்குகளில் 50 நாள்கள் வரை ஓடி தயாரிப்பாளருக்குப் பெரும் லாபத்தைக் கொடுத்தது. குறிப்பாக, ஓடிடி தளத்தில் மட்டும் இப்படம் ரூ.150 கோடி வசூல் கண்டுள்ளதாம்.

இதையடுத்து, இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள நட்சத்திர தங்குவிடுதியில் நடைபெற்றது.

இதில் விஜய் சேதுபதி உள்பட அப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பங்கேற்றனர். அப்போது இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுக்குத் தயாரிப்பு நிறுவனம் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரைப் பரிசாக வழங்கியது.

இதனால் நெகிழ்ந்துபோன இயக்குநர் நித்திலன், ‘மகாராஜா’ படத்தை ரூ.20 கோடி செலவில் தயாரித்ததாகவும் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்குப் பரிசளித்த தயாரிப்புத் தரப்பினருக்கும் நாயகன் விஜய் சேதுபதிக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் நடிக்கும்படி நடிகர் சாந்தனுவைத்தான் முதலில் அணுகினாராம் இயக்குநர் நித்திலன். ஆனால் அந்த முயற்சி கைகூடாமல் தாமதமானதால் நடிகர் விதார்த்தை வைத்து ‘குரங்கு பொம்மை’ படத்தை எடுத்து முடித்தார்.

இப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு ரூ.18 கோடிக்கு விற்பனை செய்தனர். ஆனால் அந்நிறுவனம் பலமடங்கு லாபம் ஈட்டியுள்ளது. இந்நிலையில் இயக்குநர் நித்திலனுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுக்க முன்வந்துள்ளார் விஜய் சேதுபதி.

எனினும் அதற்கு முன்னதாக நயன்தாராவை வைத்து ‘மகாராணி’ என்ற படத்தை இயக்க நித்திலன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நடிக்க நயன்தாரா வழக்கத்தைவிட குறைவான ஊதியமே பெற்றுள்ளாராம்.

காரணம் நித்திலன் கூறிய கதை அவருக்கு அந்த அளவுக்குப் பிடித்துப் போய்விட்டதாம். இதையடுத்து படபிடிப்பு தொடங்கும் முன்பே இயக்குநரை உற்சாகப்படுத்தும் விதமாக அவருக்கு சிறப்புப் பரிசு அளிக்க நயன்தாரா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அவரது தரப்பில் இருந்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. எனினும் இதை விளம்பரப்படுத்த வேண்டாம் என்றும் தனிப்பட்ட வகையில் அளிக்கப்படும் பரிசு குறித்து பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றும் அவர் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், ‘மகாராணி’ படத்தில் விஜய் சேதுபதியும் கௌரவ வேடத்தில் நடிப்பார் என்றும் அவர் மீசையின்றி நடிக்கப்போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே மனதுக்குப் பிடித்தமான கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார் நயன்தாரா. நல்ல படங்கள் என்றால் தனது ஊதியத்தைக் குறைத்துக்கொள்ளவும் சில தரமான படங்களின் விநியோக உரிமைகளை வாங்கவும் அவர் தவறுவதில்லை.

இந்நிலையில், தன் மீது நம்பிக்கை வைத்து ‘மகாராணி’ படத்தில் நடிக்கும் நயன்தாராவுக்கு இயக்குநர் நித்திலன் நன்றி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் இணையும் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

அநேகமாக, இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்