‘ஜனநாயகன்’ படத்தின் பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. ஆனால், பிப்ரவரி 5ஆம் தேதி படம் வெளியாகும் என்று கோடம்பாக்க வட்டாரங்களில் பேசப்படுகிறது.
படத்தின் தயாரிப்பாளர் கேவின் சென்னையில் முகாமிட்டுள்ளார். அனைத்து சிக்கல்களுக்கும் முடிவு கண்ட பிறகுதான் அவர் சொந்த ஊர் திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கிய பல விநியோகிப்பாளர்கள் தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்பதாக ஒரு தகவல் வெளியானது.
ஆனால், தயாரிப்பாளர் தரப்பில் அனைவரையும் அழைத்துப் பேசியபோது ஒருவர்கூட பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்கவில்லையாம். குறிப்பாக, கேரள விநியோகிப்பாளர்தான் முதலில் தான் அளித்த பணத்தைத் திருப்பிக் கேட்டார் என்ற தகவல் உண்மையல்ல என்று தெரிய வந்துள்ளது.
தான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்றும் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிடும் வாய்ப்பு தனக்குக் தனக்குக் கிடைத்தது பெரும் அதிர்ஷ்டம் என்றும் அவர் கூறுகிறார்.
பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் படத்தை வெளியிட வாய்ப்பில்லை என்றும் தணிக்கை வாரியத்தின் மறுசீராய்வுக் குழு படத்தை மீண்டும் பார்க்க குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் ஆகிவிடும் என்றும் ஒரு தரப்பு சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், விஜய் ரசிகர்களோ நிச்சயம் படம் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.

