தமக்கு உடல் ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் அண்மையில் ‘பிளாஸ்டிக்’ அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என நடிகை பவித்ரா லட்சுமி கூறியுள்ளார்.
‘ஓகே கண்மணி’, ‘நாய் சேகர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.
இந்நிலையில், தனது உடல்நலம் பாதிக்கப்பட்டதாக அண்மையில் யாரோ பொய்த்தகவல் பரப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் பவித்ரா லட்சுமி.
“இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். உங்களது பொழுதுபோக்கிற்காக எனது வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்.
“எனக்கு ஓர் எதிர்காலம் உள்ளது. இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி அதை நீங்கள் கடினமாக்க வேண்டாம்,” என பவித்ரா லட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.

