‘பொருநை’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார் ‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி.
விரைவில் வெளியாக உள்ள இந்த ஆவணப்படத்தில் தாமிரபரணி நதிக்கரை நாகரிகம் காணப்படும் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழ் எழுத்துகள் உருவான விதம் குறித்து ஒரு ஆவணப்படத்தை எடுத்திருந்தார் ஆதி. ‘தமிழி’ என்ற அந்த ஆவணத் தொடருக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு ஆராய்ச்சி மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டதும் அதை ஆவணப்படமாக்க அனுமதி கேட்டாராம் ஆதி.
ஆறு மாதங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அகழாய்வு ஆராய்ச்சிக்கான படப்பிடிப்பு மூன்று ஆண்டுகள் நீடித்ததாம். எனினும் உரிய பலன் கிடைத்தது என்று உற்சாகப்படுகிறார் ஆதி.
“இரண்டாம் ஆண்டிலேயே அகழாய்வின்போது, இரும்பு ஆயுதங்கள் கிடைத்தன. அது வரலாற்றுத் திருப்பம். ஒரு பெரும் நாகரிகம் குடிகொண்டிருந்ததற்கான அடையாளங்கள், முக்கியமான விவரங்கள் கிடைத்தன. அதுவே ‘பொருநை’யாக உருவானது,” என்று நடந்ததை விவரிக்கிறார் ஆதி.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆராய்ச்சி தொடங்கியபோது என்ன கிடைக்கும், ஆராய்ச்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து எந்தவிதத் தெளிவும் இல்லையாம்.
ஒரே பொட்டல் காடு. 200 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் புதைவிடங்கள் இருந்ததாக ஆங்கிலேயர்கள் காலத்திலேயே பதிவு செய்யப்பட்டது மட்டுமே கிடைத்த நல்ல தகவல்.
தொடர்புடைய செய்திகள்
அந்த இடம் உலக அளவில் பேசு பொருளாக மாறியது வியப்பில்லை. அந்த இடத்தில் நடக்கும் ஆராய்ச்சியை ஆவணப்படமாக்க அனுமதி கிடைத்ததால் தீவிர களப்பணியில் ஈடுபட்டதாகச் சொல்கிறார் ஆதி.
அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட நிபுணர்களிடம் அவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவரங்களை சேகரித்துள்ளார்.
“நான் இந்த அகழாய்வுப் பணியை திரைத்துறையை சார்ந்தவனாக அணுகவில்லை. ஒரு சுதந்திர இசைக்கலைஞனாகவே வந்தேன். பொதுவாக திரைத்துறையில் சம்பாதித்ததை வைத்து கார், வீடு என்று வாங்க திட்டமிடுவார்கள்.
“எனக்கு தமிழுக்கு ஏதாவது கைமாறு செய்தால்தான் மனத்தில் நிம்மதி ஏற்படுகிறது. இன்று நான் நல்ல நிலைமையில் இருக்க தமிழ் மொழிதான் காரணம்,” என்கிறார் ஆதி.
இந்த ஆவணப்படத்தை எந்த ஓடிடி தளத்துக்கும் விற்கப்போவதில்லை என்றும், படத்தை பார்த்த ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டினர் என்றும் சொல்கிறார் ஆதி.
“ஒரு விஷயத்தை உணர்வுபூர்வமாக அணுகும்போது அது அங்கேயே வெடித்து அழிந்து விடுகிறது. ஆனால் அதையே அறிவியல்பூர்வமாக காட்டும்போது அது காலத்துக்கும் நிலைத்து நிற்கிறது.
“எனவே அறிவுபூர்வமான சான்றுகள் மட்டுமே இந்த ஆவணப்படத்தில் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம்.
இதைப் பார்ப்பவர்களுக்கு தமிழர்களாகிய நமக்கு ஒரு வரலாறு இருக்கிறது என்ற பெருமிதம் ஏற்படும்.
“தமிழர்களின் இருத்தலுக்கான பணியை தொடர்ந்து செய்வேன். இந்தப் ‘பொருநை’ ஆவணப்படம் தமிழ் சமூகத்துக்கு எனது எளிய சமர்ப்பணம் (காணிக்கை),” என்கிறார் ஆதி.
ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகியவை அடுத்தடுத்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன.
இறந்த மனிதர்களை பானைகளில் வைத்து புதைத்து இருக்கிறார்கள். சிவகளையில் அப்படிப்பட்ட பானைகள் மனிதர்களின் உடலோடு புதைந்து இருந்ததைக்கூட ஆதியின் ஆவணப்படக் குழுவினர் படம் பிடித்துள்ளனர்.
அந்த உடலை மரபணுச் சோதனைக்கு உட்படுத்தினால் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று முடிவுகள் சொல்கின்றனவாம்.
“மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற சங்க இலக்கியங்களில் மனிதர்களை தாழியில் வைத்து புதைத்ததாக குறிப்பிடும் பாடல்கள் உள்ளன.
இதுபோன்ற பல முக்கியமான, அரிய தகவல்களை உள்ளடக்கி, 86 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படமாக ‘பொருநை’ உருவாகியுள்ளது.
பிரதீப்குமார், இளங்கோ ஆகிய இருவரும் இதை இயக்கி ஒருங்கிணைத்துள்ளனர். தயாரிப்பு, இசைக்கோர்வை, விவரிப்பு உள்ளிட்ட பணிகளை ஆதி கவனித்துள்ளார்.

