‘ஹிப் ஹாப்’ ஆதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி உலகப்போர்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் புது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
காதல், போர்க்களம், அதிரடிச் சண்டைக் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தில், ஆழமான கருத்தையும் வலியுறுத்தி உள்ளனராம்.
நீண்ட காலத்துக்குப்பிறகு தமிழ்ப் படம் ஒன்றில் அதிக எண்ணிக்கையிலான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
“இந்தப் படத்தில் ஒன்பது பாடல்கள் உள்ளன. இவற்றை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம். அவர்களின் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
“இயக்குநர் சுந்தர்.சி.தான் என் திறமையை அறிந்து இசையமைக்க வாய்ப்பளித்தார். நான் நடித்த படத்தையும் தயாரித்தார்.
“இப்போது இப்படத்தை நானே தயாரித்திருக்கிறேன். லாபம் வந்தால் மட்டுமே அடுத்தடுத்து தயாரிப்பில் ஈடுபடுவேன்,” என்கிறார் ஆதி.
திறமை மட்டுமே இருந்தால் சாதித்துவிடலாம் என்றும் திறமையோடு நல்ல கல்வி அறிவும் இருந்தால்தான் யாரிடமும் கைகட்டி நிற்காமல் தலைநிமிர்ந்து நிற்கலாம் என்றும் ‘கடைசி உலகப்போர்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் நடிகர்கள் நாசர், நட்டி, அழகர் பெருமாள், முனீஸ்கான், சிங்கம்புலி குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார் சுந்தர்.சி
தொடர்புடைய செய்திகள்
இந்த நிகழ்ச்சியில் பேசிய பலர் ஆதியின் திறமையை வெகுவாகப் பாராட்டினர்.
“தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில் மூன்றாவது உலகப்போர் நடந்தால் உலகமே இருக்காது என்றுதான் நினைக்கிறேன் அதனால்தான் ’கடைசி உலகப்போர்’ என்று தலைப்பு வைத்தோம்.
“ஹிப் ஹாப் தமிழா நிறுவனத்தை இரண்டு பேராக ஆரம்பித்தோம். இப்போது எங்களுடன் 110 பேர் இருக்கிறார்கள். திறமையான கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளித்து வருகிறோம்,” என்று குறிப்பிட்ட ஆதி, திரையுலகுக்கு வரும் இளம் தலைமுறையினருக்கு கல்வியும் மிக அவசியம் என்கிறார்.
ஒரு வேளை தாம் திரையுலகில் இனி தோல்வி கண்டாலும், அடுத்து கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து வாழ்க்கையைத் தொடர முடியும் என்கிறார்.
“ஏனெனில், எனக்கு எந்தவிதப் பயமும் இல்லை. எனது இந்த துணிச்சலுக்குக் காரணம் நான் கற்ற கல்விதான். அதனால்தான் எப்போதுமே திறமையோடு நல்ல படிப்பும் தேவை என ரசிகர்களுக்கு அறிவுறுத்தி வருகிறேன்,” என்கிறார் ஆதி.
அண்மையில் இவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக ரசிகர்களிடையே அடிதடி ஏற்பட்டது. இது தொடர்பான காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.
இது குறித்து பேசிய அவர், சண்டையில் ஈடுபட்ட சிலரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றிவிட்டதாக விளக்கம் அளித்தார்.
“அந்த நிகழ்ச்சிக்கு 25,000 பேர் வந்திருந்தனர். கொண்டாட்டத்துடன் நடனமாடும்போது 10, 15 பேர் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனர்.
“இது குறித்து யாருக்கும் எந்த விவரமும் தெரியாது. ஆனால் சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவத்தை பெரிதாக்கிவிட்டனர்,” என்கிறார் ஆதி.
இவர் கோவை பாரதியார் அரசு பல்கலைக்கழகத்தில் இசைத்துறை சார்ந்த தலைப்பில் தனது ‘பிஹெச்டி’ ஆய்வுப் படிப்பை முடித்துள்ளார்.

