தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச்சுற்றுலா செல்லும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்: அன்பில் மகேஸ்

2 mins read
69c99a0c-5afc-48cd-a471-7d2f49b96620
அமைச்சர் அன்பில் மகேஸ். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 60 பேர், பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலாவுக்காக அழைத்துச் செல்லப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 236 மாணவர்கள் இவ்வாறு ஆறு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இதன்மூலம் 92 ஆசிரியர்களுக்கும் கல்விச்சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர் சார்ந்த பல்வேறு நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி, அங்கீகரிக்கும் வகையில் முதன்முறையாக அவர்களை வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

தனித்திறனுடன் விளங்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களின் தொழில்சார் அறிவு, திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், ‘கனவு ஆசிரியர்’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது தமிழக அரசு. இத்திட்டத்தின் மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 60 ஆசிரியர்கள் கல்விச்சுற்றுலாவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களை 90 விழுக்காட்டுக்கும் மேல் மதிப்பெண் பெறவைத்து சிறப்பிடம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் விவரித்தார்.

இதற்கிடையே, பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் ஆகியவற்றின் மூலம் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவதாகவும் இதற்கு மாணவர்கள், பெற்றோர் தரப்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் முதல்வர் தமது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகவலைக் கேட்டதும் எனது இதயம் மகிழ்ச்சியால் நிறைந்தது என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்