சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படுவது போலவே சின்னத்திரை கலைஞர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக விருது வழங்கும் விழாக்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு இத்தகைய நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
சிறந்த மாமியார், மருமகள் என்ற பிரிவில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மாமியாராக நடித்துவரும் நிரோஷா, அவரது மருமகள்களான சரண்யா துராடி, ஹேமா, ஷாலினி ஆகிய நால்வருக்கும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் விருது வழங்கினார்.
விருது மேடையில் நிரோஷாவுக்கு காலஞ்சென்ற அவரது தாயாருடன் இருப்பது போன்ற ஓவியத்தை அளிக்க, அதைப் பார்த்ததும் நெகிழ்ந்து போனார்.
“முன்பு ‘சின்ன பாப்பா, பெரிய பாப்பா’ தொடரில் நடித்தேன். அதற்குப் பிறகு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. எனது மருமகள்களாக நடித்துள்ள ஹேமா, சரண்யா, ஷாலினி ஆகிய மூவருமே சிறப்பாக நடிக்கிறார்கள்.
“ஹேமாவுக்கும் எனக்கும் அம்மா, மகளுக்கான உடல்மொழி இயல்பாகவே வந்துவிட்டது. ஷாலினி தொடக்கத்தில் தயக்கத்துடன் இருந்தார். உன்னிடம் திறமை இருக்கிறது என்று சொல்லி ஊக்கமளித்ததும் தனது திறமையை நிரூபித்துவிட்டார்,” என்றார் நிரோஷா.
பின்னர், மாமியாரும் மூன்று மருமகள்களும் சேர்ந்து மேடையில் நடனமாட, அரங்கமே கைதட்டி ஆர்ப்பரித்தது.
சிறந்த வில்லன் விருதினை நடிகர் ‘வழக்கு எண்’ முத்துராமனுக்கு இயக்குநர் விஜய் மில்டன் வழங்கினார்.
சிறந்த தொகுப்பாளருக்கான விருது மாகாபா ஆனந்துக்கு வழங்கப்பட்டது. நன்றி தெரிவித்து பேசிய அவர், இது தாம் பெறும் இரண்டாவது ஆனந்த விகடன் விருது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“என் தந்தை நூலகராக இருந்தார். அப்போது நிறைய பத்திரிகைகளைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. முதல் முறையாக விகடன் விருது பெற்றபோது இந்த அளவுக்குப் பிரம்மாண்டம் இல்லை. முதல் விருது வாங்கும்போது வானொலி தொகுப்பாளராக இருந்த நான் தொலைக்காட்சி தொகுப்பாளரானேன். இப்போது இந்த விருதுக்குப் பிறகு என்னவென்று தெரியவில்லை,” என்றார் மாகாபா.
ஸீ டிவியில் ஒளியேறும் ‘சரிகமபா’ நிகழ்ச்சிக்கு ‘மக்கள் மனம்கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சி’ விருது கிடைத்தது. அதன் நடுவர்கள் விஜய் பிரகாஷ், சைந்தவி, ஸ்ரீனிவாசுக்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா விருது வழங்கினார்.
விருதைப் பெற்றுப் பேசிய விஜய் பிரகாஷ், “இசை என்பது மிகவும் தெய்வீமானது. முழு அர்ப்பணிப்பு கொடுத்தால்தான் அது சாத்தியம். சின்னச் குழந்தைகள் கொடுக்கும் ஊக்கம்தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம். இதுபோன்ற விருதுகள் அவர்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்ல உதவும்,” என்றார்.
தொடர்ந்து, ‘பாக்கியலட்சுமி’ சீரியல் குழுவினருக்கு மேடையில் விகடன் சார்பில் கேக் வெட்டி ‘ஃபேர்வெல்’ கொண்டாடப்பட்டது நெகிழ்ச்சித் தருணமாய் அமைந்தது.


