‘டெஸ்ட்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் மாதவன். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் அப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
அண்மையில், அப்படக்குழு ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மாதவன், “ஒருத்தருக்கு கதாநாயகனாக இருப்பவர், மற்றவர்களுக்கு வில்லனாக இருப்பார். ஒரு படத்தின் கதாநாயகன் யார், வில்லன் யார் என்பதை கதைதான் தீர்மானிக்கிறது,” எனப் பேசினார்.
அதுதான் அப்படத்தின் மையக்கதை எனக் கூறிய அவர், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் வில்லனாக அதில் நடித்திருக்கிகேன் என்றார்.
“வில்லன், கதாநாயகன் என்ற வேறுபாடு எனக்கு இல்லை. நான் ஒரு நடிகன் அவ்வளவுதான். கதை நன்றாக இருந்தால் எந்தக் கதாபாத்திரத்திலும் நான் நடிப்பேன். நல்லதை மட்டுமே சொல்லி வகுப்பெடுத்து நடிக்க நான் ஒன்றும் குரு கிடையாது. நான் ஒரு நடிகன்,” என மாதவன் கூறினார்.
“பிள்ளைகளை அடிக்கிற மாதிரி அப்படத்தில் சில காட்சிகள் வருகின்றன. மனைவியாக நடித்திருக்கும் நயன்தாராவையும் அறைகின்ற மாதிரி சில காட்சிகள் உள்ளன. முதலில் அவ்வாறு நடிக்க மறுத்தேன். இதுவரை நான் நடித்த படங்களில் குடும்ப வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகளில் நடித்தது கிடையாது,” என அவர் தெரிவித்தார்.
“ஆனால், ‘டெஸ்ட்’ படத்தில் அப்படி நடித்திருக்கிறேன். அதற்குக் காரணம் கதைதான். கதைக்குத் தேவைப்பட்டதால் அவ்வாறு செய்தேன். நானும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நடிகரை நடிகராக மட்டுமே பாருங்கள்,” என்றார் மாதவன்.
“குடும்ப வன்முறை நமது கலாசாரமன்று. அப்படத்தில் பெண்ணை, குழந்தையை அடிக்கும்போதே என்னுடைய மனசாட்சி என்னைவிட்டுப் போய்விடுவதுபோல் காட்சிகள் இருக்கும். வில்லன் கதாபாத்திரத்திற்கு நல்லது கெட்டது கிடையாது,” என்று வெளிப்படையாகப் பேசினார்.
இதற்கிடையே, கஜினி படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிக்கயிருந்தது மாதவன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான அப்படம் தமிழ்த் திரையுலகில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட படமாக அமைந்தது.
சஞ்சய் ராமசாமியாகவும் மறுபக்கம் மொட்டை அடித்து உடம்பு முழுக்க பச்சை குத்திக்கொண்டு தனது காதலியை கொலை செய்தவர்களைத் தேடி பழிவாங்கும் கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டியிருப்பார்.
ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க அப்படத்தின் இயக்குநரான ஏ. ஆர். முருகதாசின் முதல் தேர்வு மாதவனாம். அதுகுறித்து மாதவனே ஓர் நேர்காணலில் பேசியுள்ளார்.
“கஜினி படத்தின் கதையைக் கேட்டபோது முதல் பாதி மிகவும் பிடித்திருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் கதையின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. அதனால், அப்படத்தில் நடிக்க மறுத்தேன்,” என மாதவன் கூறியுள்ளார்.
இருப்பினும், அக்கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா அற்புதமாக நடித்திருந்தார் என்றும் ‘சிக்ஸ் பேக்’ வைப்பதற்காக அவர் சாப்பிடாமல் இருந்ததை கேட்டு அசந்து விட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஓடிடி தளத்தில் நேரடியாக நடிக்கச் சென்றதன் மூலம் திரைத்துறையின் அழிவிற்கு மாதவன் போன்றவர்கள் காரணமாகி விடக் கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகள் நலிவடைவதைத் தவிர்க்க ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் ஆண்டுக்கு இரண்டு படங்களாவது வெளிவரும் வகையில் நடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.