ரசிகர்கள் என்னை இளவரசியாகப் பார்க்க விரும்புகிறார்கள்: மாளவிகா

ரசிகர்கள் என்னை இளவரசியாகப் பார்க்க விரும்புகிறார்கள்: மாளவிகா

3 mins read
c1444492-5659-48fb-a3c7-633a51ba24f9
மாளவிகா மனோஜ். - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘ஜோ’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் மாளவிகா மனோஜ்.

அதன் பிறகு மலையாளத்தில் கவனம் செலுத்தியதால் தமிழில் தொடர்ந்து நடிக்கவில்லை. இப்போது ‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் இளையர்களின் மனக்கதவைத் தட்டியுள்ளார்.

‘பிரகாஷன் பரக்கத்தே’ என்ற மலையாளப் படம்தான் மாளவிகாவை திரைத்துறைக்கு அழைத்து வந்தது. அந்தப் படத்தில் நடித்தபோது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாராம்.

மாளவிகாவுக்குத் தெரியாமலேயே அவரது புகைப்படத்தைப் படத்தின் தயாரிப்புத் தரப்புக்கு அனுப்பியுள்ளார் அவரது தாயார். இவரை நாயகியாக அறிமுகப்படுத்தலாம் என்று முடிவெடுத்த பிறகே இயக்குநரும் தயாரிப்பாளரும் இவரிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளனர்.

“உண்மையாகவே எனக்கு அப்போது எதுவும் தெரியாது. பத்தாம் வகுப்பு படிக்கும் சின்ன பெண்ணுக்குச் சினிமா பற்றி அப்படி என்ன தெரிந்துவிடப் போகிறது. என்ன மாதிரியான கதை, கதாபாத்திரங்களைத் தேர்வு செய்ய வேண்டும், எப்படி நம்மை அதற்கேற்ப தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என எதுவும் தெரியாது. என் அறிமுகப்படம் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டது,” என்கிறார் மாளவிகா.

அதன்பின் இவர் நடித்த தெலுங்குப் படமான ‘ஹோ பாமா ராமா’, ‘ஓடிடி’ தளத்தில் வெளியாகி பல்வேறு மொழிகளில் நல்ல வரவேற்பு பெற்றதால் தெலுங்கில் மேலும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

தமிழில் மாளவிகா நடித்துள்ள இரண்டு படங்களிலும் ரியோதான் கதாநாயகன்.

“ஏன்.. அவருடன் மட்டும்தான் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். ‘ஆண்பாவம்’ படத்தில் எனக்கு முன்பே ஒப்பந்தமானவர் ரியோதான். அதன் பிறகுதான் இயக்குநர் என்னிடம் கதையைச் சொன்னார்.

“இயக்குநர் கலைச்செல்வன் இதற்கு முன்பு யூடியூப் தளத்தில் சில படங்கள், இணையத் தொடர்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்,” என்கிறார் மாளவிகா.

சரி, ‘ஆண்பாவம்’ படத்தின் கதை.

வாழ்க்கையில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்று நினைக்கும் இளம்பெண்ணுடன் தொடர்புள்ள கதை. அந்தப் பெண்ணுக்கும் பெண்ணியம் பேசும், பெண்களுக்கான உரிமைகள் குறித்து அரைகுறையாகப் புரிந்துகொண்டுள்ள ஓர் இளையருக்கும் திருமணமாகிறது.

திருமணத்துக்குப் பிறகு ஆணும் பெண்ணும் சமம் என்கிறார் கணவர். அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அந்தப் பெண் தன் கணவனை அடிமையைப் போல் நடத்துகிறாள். தனது தவறுகளுக்கும் கணவர்தான் காரணம் எனப் பழிசுமத்த, ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுவிடுகிறது.

“மொத்தத்தில் ஆண்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து எதார்த்தமாகப் பேசியுள்ளோம். படக் காட்சிகள் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கும். கணவரை ஆட்டிப் படைக்கும் கதாபாத்திரத்தில் அனுபவித்து, ரசித்து நடித்தேன்.

“கனவுக் கதாபாத்திரம் என்றெல்லாம் எதுவும் இல்லை. பொதுவாக மலையாள நடிகைகள் நல்ல கதை, கதாபாத்திரம் ஆகியவற்றுக்குத்தான் முன்னுரிமை அளிப்பார்கள்.

“ஒரு படம் சரியாக ஓடாவிட்டால் மிகவும் வருத்தப்படுவார்கள். நானும் அப்படித்தான். ஒரு நடிகையாக எல்லா வெற்றிப் படங்களிலும் என்னுடைய சிறு பங்களிப்பும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.

“சமூக ஊடகங்களில் எனது பதிவுகளை ரசிகர்கள் உடனுக்குடன் பார்த்துவிடுவார்கள். அவர்களுடைய பாராட்டுகள்தான் எனக்கு உற்சாக ‘டானிக்’. என் அழகைப் பாராட்டும் பல ரசிகர்கள், வரலாற்றுக் கதைகளில் நான் நடிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களுக்காக ஒரு படத்திலாவது உடல் முழுவதும் நகைகளை அணிந்து இளவரசியாக வலம்வர வேண்டுமென ஆசை,” என்கிறார் மாளவிகா.

குறிப்புச் சொற்கள்